
சென்னை அண்ணாநகர் 18வது மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடி இருப்பில் வசித்து வந்தவர் நவீன் கண்ணா இவர் தேனாம்பேட்டையில் உள்ள மத்திய பாதுகாப்பு கட்டுப்பாட்டு கணக்காளர் அலுவலகத்தில் சீனியர் ஆடிட்டராக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நிவேதிதா என்ற பெண்ணோடு திருமணம் நடந்துள்ளது. நிவேதிதா தெற்கு ரயில்வேயின் பெரம்பூர் லோக்கல் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஏழு வயதில் நவீன் கண்ணன் என்ற மகன் இருந்தார். நவீன் கண்ணன் தனது தாயார் தந்தை ஆகியருடன் வசித்து வந்தார்.
27ஆம் தேதி அன்று காலை 7:45 மணிக்கு நவீன் கண்ணா தனது தாய் புவனேஸ்வரியிடம் வெளியே செல்வதாக கூறி வீட்டை விட்டு புறப்பட்டு சென்றுள்ளார். அடுத்த ஒரு மணி நேரத்திலேயே புவனேஸ்வரிக்கு அறிமுகம் இல்லாத செல்போன் எண்ணில் இருந்து நவீன் கண்ணா தொடர்பு கொண்டார்.
அப்போது தனது மனைவியும் குழந்தையும் அறையில் நீண்ட நேரம் தூங்குவார்கள். அவர்களை 11 மணி வரை தூங்க விடுங்கள் எழுப்ப வேண்டாம் என நவீன் கண்ணா தெரிவிக்கிறார். இதற்கிடையில் நிவேதிதாவின் தாய் புவனேஸ்வரிக்கு போன் செய்து நிவேதிதாவின் அப்பா உடல்நிலை சரியில்லாததால் முகப்பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரை காண இன்று நிவேதிதா வருவதாக சொன்னாள். நான் போன் செய்தால் அவள் போனை எடுக்கவில்லை. போனை அவளிடம் கொடுங்களேன் என்று கூறியுள்ளார். அப்போது புவனேஸ்வரி போனை கையில் எடுத்து கொண்டு நிவேதிதா அறைக்கு சென்றபோது அறை உள்பக்கமாக பூட்டி இருந்துள்ளது.
நீண்ட நேரமாக கதவை தட்டியும் நிவேதிதா கதவை திறக்காததால் சந்தேகம்அடைந்து அக்கம் பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்திருக்கிறார்கள். பின்னர் அறையின் உள்ளே சென்று பார்த்தபோது சிறுவன் நவீன் கண்ணா கழுத்தை துணியால் இருக்கக்கப்பட்டு இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
அருகே நிவேதிதா கழுத்தில் பலத்த காயத்துடன் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனை கண்டு புவனேஸ்வரி அதிர்ச்சியில் உரைந்து போனார். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலமாக அவர்களை கீழ்பாக்கம் அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பே நாங்கள் மூன்று பேரும் செத்துவிடலாம் என்று முடிவு செய்துவிட்டோம். அதனால் எங்களை காப்பாற்ற வேண்டாம் என்று நிவேதிதா மாமியாரிடம் தெரிவித்திருக்கிறார். என்ன நடக்கிறது என்றே புரியாமல் புவனேஸ்வரி அதிர்ச்சியில் இருந்துள்ளார்.
வெளியே சென்ற தனது மகனும் ஏதாவது விபரீத முடிவை எடுத்து விடுவானோ என பயந்து போன புவனேஸ்வரி தன் மகனை எப்படியாவது காப்பாற்றுங்கள் என போலீசாரிடம் தெரிவித்திருக்கிறார்.
போலீசாரும் நவீன் கண்ணாவின் மொபைல் சிக்னலை வைத்து கண்டுபிடிக்கலாம் என நினைத்தபோது போனை நவீன் கண்ணா வீட்டிலேயே வைத்துவிட்டு சென்றதும் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகே சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் முன் விழுந்து ஒரு நபர் இறந்து கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு இறந்து கிடந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சடலத்திற்கு அருகே செல்போன் ஒன்று நொருங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் இருந்த சிம் கார்டை போலீசார் பரிமுதல் செய்திருக்கிறார்கள். மற்றொரு போனில் போலீசார் அந்த சிம் கார்டை போட்டு பார்த்தபோது அதில் டேட் என்ற பெயரில் ஒரு எண் பதிவு செய்யப்பட்டிருந்துள்ளது.
அந்த எண்ணை தொடர்பு கொண்ட போதுதான் இறந்தவர் நவீன் என்ற முடிவுக்கு போலீசார் வந்தனர். இந்த சம்பவங்கள் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இப்படி குடும்பமே விபரீத முடிவை எடுக்க என்ன காரணம் என துப்பு துலக்கி இருக்கிறார்கள்.
அப்போதுதான் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி பகீர் கிளப்பி உள்ளது. நவீன் செஸ் விளையாட்டு வீரர் என்பதால் அதன் மூலம் அவருக்கு கட்டுப்பாட்டு கணக்காளர் அலுவலகத்தில் ஆடிட்டராக மத்திய அரசு வேலை கிடைத்துள்ளது.
தான் பணியாற்றி வந்த மத்திய கணக்கு கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய 3 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை நவீன் தனது வங்கி கணக்கிற்கு மாற்றி கையாடல் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த பணத்தை எல்லாம் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால் லாபம் பார்க்கலாம் என நினைத்து நவீன் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்திருக்கிறார். ஆனால் அதில் நஷ்டமடைந்து பணத்தை தொலைத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே நவீன் கையாடல் செய்திருப்பது துறை ரீதியான விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு, டெல்லிக்கு அது தொடர்பான அறிக்கையை அனுப்பி வைத்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க இருப்பது தெரிந்துள்ளது.
இதனால் நவீன் சமீப நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் அதிகாலை 3:00 மணி அளவில் நவீன் நடந்ததை எல்லாம் தனது மனைவியிடம் தெரிவித்தபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அவமானப்பட்டு வாழ்வதை விட குடும்பத்தோடு உயிரை மாய்த்து கொள்ளலாம் என பேசி மனைவி கழுத்தை அறுத்துவிட்டு மகனையும் கொன்றதாக போலீசார் தெரிவித்தனர்.
இரத்த காயத்துடன் கிடந்த நிவேதிதாவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அருகில் வசிக்கும் மோசஸ் என்பவர் செய்தியாளர்களிடம் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது குழந்தை கழுத்து நெறிக்கப்பட்டு இறந்து கிடந்ததாகவும் பெண் கை,கழுத்தில் வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார்.
தற்போது நிவேதித்தா ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய அரசு பணியில் பெரிய பொறுப்பில் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிய போதும் பேராசையால் ஆன்லைன் ட்ரேடிங் ஷேர் மார்க்கெட்டில் பணத்தை இழந்து கையாடல் செய்து சிக்கி கொண்டதால் விபரீத முடிவை தேடி ஒரு குடும்பமே உருக்குலைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.





