
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட முனிசிபல் காலனி பகுதியில் ஈரோடு கூட்டுறவு நகர வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான வாடிக்கையாளர்கள் பணத்தை டெபாசிட் செய்தும் ,நகைகளை அடமானம் வைத்தும் பணம் பெற்றுள்ளனர்.
இந்த சூழலில் சமீப நாட்களாகவே இந்த வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகைகள் கையாடல் செய்யப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது. இதன் பெயரில் கூட்டுறவு வங்கியின் இயக்குனர் ஜெயந்தி தலைமையிலான அலுவலர்கள் நேரடியாக கூட்டுறவு நகர வங்கிக்கு வந்து வாடிக்கையாளர்கள் டெபாசிட் தொகை, இருப்பு விவரம் அதேபோல் அடமானம் வைத்த நகைகளின் எடை பாதுகாப்பு அறையில் உள்ள நகைகளின் எடை ஆகியவற்றை தணிக்கை செய்தனர்.
இதில் வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்த நகைகளில் 8.25 கிலோ தங்க நகை கணக்கில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதை அடுத்து அந்த வங்கியில் பணியாற்றி வரும் மேலாளர் உட்பட அனைத்து பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது வங்கியின் நகை மதிப்பீட்டாளராக 15 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வந்த ஈரோடு ரங்கம்பாளையம் இரணியன் வீதியை சேர்ந்த ரமேஷ் குமார் என்பவர் திடீரென மாயமானார்.
இதனால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது உடனே ஈரோடு அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் கூட்டுறவு வங்கியின் இயக்குநர் ஜெயந்தி புகார் அளித்தார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த கூட்டுறவு நகர வங்கியில் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
அதன் தொடர்ச்சியாக தலைமறைவாக இருந்து வந்த ரமேஷ் குமாரை தனிப்படை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
அதில் ரமேஷ் குமார் வங்கியின் மேலாளரான ஈரோடு மூலப்பட்டறை காந்திநகரை சேர்ந்த கதிரவன் அவரது நண்பரான செந்தில்குமார் ஆகியோருடன் இணைந்து வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்த நகையை கையாடல் செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் போலீசார் வங்கியின் மேலாளரான கதிரவனிடம் விசாரித்ததில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் அவர்கள் கையாடல் செய்த 8.25 கிலோ தங்க நகையையும் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் நகை மதிப்பீட்டாளரும், ,வங்கி மேலாளரும் கைதான நிலையில் தலைமறைவாக உள்ள செந்தில்குமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். வங்கியின் மேலாளரே ஊழியர்களுடன் இணைந்து வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்த நகையை கையாடல் செய்த சம்பவம். அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.





