
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு தொடங்கிய மழை, இன்று காலை வரை இடைவிடாமல் பெய்தது. இதனால், மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன.
சதுப்பேரி ஏரி மற்றும் தொரப்பாடி ஏரி முழுமையாக நிரம்பி, உபரி நீர் வெளியேறி வருகிறது. அந்த உபரி நீர் கால்வாய்களின் வழியாக பிற ஏரிகளுக்கு செல்ல வேண்டிய நிலையில், கால்வாய்கள் ஆக்கிரமிப்புகளால் மறைக்கப்பட்டுள்ளதால், தண்ணீர் வெளியேற முடியாமல் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற்கிறது.
இதனால், வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நான்காவது மண்டலத்தின் 42ஆம் வார்டு பகுதிகளில் — அப்துல் கலாம் தெரு, கே.கே. தெரு, கே.கே. நகர் உள்ளிட்ட பகுதிகளில் — தற்போது மழைநீர் பெருமளவில் தேங்கியுள்ளது.
இந்த தண்ணீர் தேக்கம் காரணமாக, அந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மழைக்காலங்களில் இதே நிலை மீண்டும் மீண்டும் ஏற்படுவதாகவும், இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கும் மாநகராட்சிக்கும் ஏற்கனவே புகார் அளித்திருந்தாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தண்ணீர் தேங்கியதால் வீடுகளில் வசிக்கும் முதியவர்கள், சிறுவர்கள் உள்ளிட்டோருக்கு காய்ச்சல் போன்ற நோய்கள் பரவக்கூடிய அபாயம் உருவாகியுள்ளது. ஆகவே, மழைக்காலத்திற்கு முன்பாகவே கால்வாய்களை சீரமைத்து, தண்ணீர் செல்வதற்கான வழிகளை அமைத்து தர வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதோடு, உபரி நீர் வெளியேறும் அளவும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நிலவும் பிரச்சனையை உடனடியாக தீர்க்க மாவட்ட நிர்வாகம் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.




