
திருப்பூர் மாவட்டம், அவிநாசி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இரவு பெய்த கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், சில வீடுகளையும் வெள்ளம் சூழ்ந்திருப்பதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவிநாசி அடுத்த நடுவஞ்சோரி கிராமத்தில் உள்ள குளம் மற்றும் குட்டைகள் நிரம்பி, சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியுள்ளது.
இதன் காரணமாக, நடுவஞ்சேரியிலிருந்து திருவைபுரம் செல்லும் சாலை முழுவதும் தண்ணீர் எழும்பி ஓடுவதால், அங்கு போக்குவரத்து சிறிது பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நடுவஞ்சேரியிலிருந்து கருக்கண்காட்டு புதூர் வழியாக துருக்கமுத்தூர்-நம்பியூர் செல்லும் சாலை மற்றும் சம்பட்டம்பாளையம் குளம் வழியாக வெளியேறும் மழைநீர் காரணமாக, அந்த வழிகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பாதிப்பு ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கனமழை காரணமாக நடுவஞ்சேரி அருகே தாழ்வான பகுதியில் உள்ள சில வீடுகளில் வெள்ளநீர் புகுந்து, அந்த வீடுகளில் வசித்த மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இவர்கள் தற்போது அருகிலுள்ள மண்டபங்களில் தங்கியிருக்கின்றனர்.
தற்போது அங்கு மழை நின்று வெயில் அடிப்பதன் காரணமாக மழைநீர் வடிந்து வருகிறது . வெள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது. திருப்பூர் மாவட்டத்திற்கு மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது பெய்திருக்கும் மழைக்கு வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்திருக்கிறது. தொடர்ந்து அவர்களை அங்கிருந்து மீட்கும் பணியும் நடைபெற்று வருகிறது.




