
உலகின் மிகப்பெரிய ஐபோன் உற்பத்தியாளரான பெகாட்ரான் நிறுவனம் சென்னையில் இரண்டாவது உற்பத்தி ஆலையை நிறுவ இருக்கிறது. இதன் மூலம் சென்னை, உலக அளவில் ஐபோன் மற்றும் 5ஜி சாதன உற்பத்தி மையமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளவில் ஆப்பிள் நிறுவனத்திற்கு தேவையான ஐபோன்களை தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களில் பெகாட்ரான், பாக்ஸ் கான் போன்றவை உள்ளன. தமிழ்நாடு, ஏற்கனவே உலகளவில் முக்கிய எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மையமாக திகழ்கிறது; மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் ஐபோன்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
பெக்ட்ரான் நிறுவனம் சென்னையில் புதிய ஆலையை 5ஜி ஸ்மால் செல்கள் உற்பத்திக்காக அமைக்க இருப்பதாகவும், இது இந்தியாவின் தனியார் 5ஜி சந்தைக்கு உதவிகரமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. நிறுவனம் இந்தியாவிற்கான மேலாளர் ஜெயந்த் மணி கூறியதாவது:
“சென்னையில் இரண்டாவது உற்பத்தி ஆலையை நிறுவி, 5ஜி சாதன உற்பத்தியில் முன்னணி நிலையைப் பெற விரும்புகிறோம். இந்த ஆலையின் மூலம் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும்.”
பெகாட்ரான் உலகளவில் மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி நிறுவனம் ஆகும். வருடாந்திர வருமானம் 35–40 பில்லியன் டாலர் எனும் அளவில் உள்ளது. தற்போது சென்னையில் நிறுவப்படும் ஆலையில் 5ஜி கருவிகள், கேமரா, வைஃபை சாதனங்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளன.
ஐரோப்பா, கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள், வட அமெரிக்கா உள்ளிட்ட சந்தைகளுக்கும் இந்த உற்பத்தி ஏற்றுமதி செய்யப்படவுள்ளது. தற்போதைய ஆலையை டாட்டா எலக்ட்ரானிக்ஸ் கையகப்படுத்தி ஐபோன் உற்பத்தியை தொடர்கிறது. புதிய ஆலையின் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் ஐபோன்கள் மற்றும் 5ஜி சாதனங்கள் விரைவாக வழங்கப்படுவதாக எதிர்பார்க்கப்படுகிறது.






