
செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தால் தகவல் தொழில்நுட்ப துறையில் 20 லட்சம் வேலைவாய்ப்புகள் பரிதாபமாக போக்கப்படும் அபாயம் இருப்பதாக நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பல துறைகளில் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தி வரும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம், குறிப்பாக தகவல் தொழில்நுட்ப (ஐடி) துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனை முன்னிட்டு இந்தியாவில் ஏஐ யுகத்தில் வேலை வாய்ப்புகள் குறித்த புதிய அறிக்கையை மத்திய அரசின் சிந்தனை மற்றும் திட்டமிடல் அமைப்பான நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது.
அதில், ஐடி துறையில் சுமார் 20 லட்சம் நபர்கள் வேலை இழக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்து வந்த முக்கிய துறையாக இருந்தது ஐடி துறை. 1990களுக்கு முன் பட்டப்படிப்பாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பது கடினமாக இருந்த நிலையில், ஐடி துறை வளர்ச்சியால் நிலைமை பெரிதும் மாறியது.
தொடக்கத்தில் பொறியியல் மற்றும் தொழில்முறை படிப்புகள் முடித்தவர்களுக்கே இந்த துறையில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு பிபிஓ (BPO) நிறுவனங்களின் மூலம் வணிகவியல், கலை, அறிவியல் போன்ற துறைகளைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கும் வேலை வாய்ப்புகள் பெருமளவில் உருவாகின.
இந்நிலையில், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிடமிருந்து அதிகமான போட்டி ஏற்பட்டதுடன், சமீபத்திய ஆண்டுகளில் பணிநீக்கங்களும் அதிகரித்தன. கொரோனா காலம் இதை மேலும் தீவிரப்படுத்தியது. தற்போது ஏஐ வளர்ச்சியால் அந்த மாற்றங்கள் இன்னும் வேகமாக நடைபெறவிருக்கின்றன.
டேட்டா என்ட்ரி, வாடிக்கையாளர் சேவை போன்ற துறைகள் முழுமையாக இயந்திர மயமாக்கப்படக்கூடும் என்றும், இதனால் பெருமளவு ஆட்குறைப்புகள் நிகழும் அபாயம் இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனினும், ஐடி துறையின் எதிர்காலம் முழுமையாக இருளில் மூழ்கவில்லை எனவும் நிதி ஆயோக் நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஏஐ தாக்கத்தால் 20 லட்சம் வேலைகள் இழக்கப்பட்டாலும், அதே நேரத்தில் 2030ஆம் ஆண்டுக்குள் 40 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏஐ பொறியியல், மெஷின் லேர்னிங், ஏஐ நெறிமுறைஏஐ பொறியியல், மெஷின் லெர்னிங், ஏஐ நெறிமுறை மற்றும் டேட்டா நிமிடத்துவம் (data stewardship) போன்ற புதிய துறைகளில் வேலை வாய்ப்புகள் உருவாகும் என நிதி ஆயோக் அறிக்கை தெரிவிக்கிறது.
அதே நேரத்தில், “ஏஐ திறன்களை கற்றுக்கொள்பவர்கள் எதிர்காலத்தில் பாதுகாப்பாக இருப்பார்கள்; கற்றுக்கொள்ளாதவர்களே வேலை இழப்பர்” என்றும் அறிக்கை எச்சரிக்கிறது.
இளைஞர்களின் ஏஐ திறன் மேம்பாட்டுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்களின் திறன்களையும் ஏஐ வளர்ச்சியையும் இணைத்து நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு சாதகமான சூழலை உருவாக்க முடியும் என நிதி ஆயோக் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
2035ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை “ஏஐ திறமையாளர்களின் உலக மையமாக” மாற்றுவதே அரசின் நீண்டகால இலக்காகும் என்று அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.






