
செல்போனில் அழைப்பவரின் பெயரை திரையில் காண்பிக்கும் புதிய வசதி விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
மோசடி அழைப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கவும், நுகர்வோருக்கு பாதுகாப்பான தொடர்பு அனுபவத்தை வழங்கவும், அழைப்பாளர் பெயரை (Caller Name) திரையில் காட்டும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) இதற்கான பரிந்துரையை ஏற்கனவே மத்திய தொலைத்தொடர்பு துறைக்கு அனுப்பியிருந்தது.
அந்த பரிந்துரையின் படி, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து செல்போன்களிலும் CNAP (Calling Name Presentation) எனப்படும் அழைப்பாளர் பெயர் தரவு வழங்கும் வசதி இருப்பதை உறுதிப்படுத்த மத்திய அரசு உத்தரவுகள் வெளியிட வேண்டும் என TRAI பரிந்துரைத்தது.
இந்நிலையில், செல்போனில் அழைப்பவரின் பெயரை திரையில் காண்பிக்கும் இந்த புதிய வசதியை அறிமுகப்படுத்துவது தொடர்பாக, மத்திய தொலைத்தொடர்பு துறை மற்றும் TRAI ஆகியவற்றுக்கு இடையே சுமூகமான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பரிந்துரைகள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டவுடன், இந்த வசதி அடுத்த ஆறு மாதங்களில் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நடைமுறை அமலுக்கு வந்த பின், செல்போனில் அழைப்பவரின் எண்ணுக்குப் பதிலாக அவர்களின் பெயரே திரையில் காட்டப்படும்.
இந்த வசதி முதற்கட்டமாக 4G மற்றும் 5G தொழில்நுட்பம் கொண்ட செல்போன்களில் மட்டுமே கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






