
ஜியோவும் கூகுளும் ஒரு அதிரடி சலுகையை அறிவித்துள்ளன. அக்டோபர் 30 முதல், 18 முதல் 25 வயதுக்குட்பட்ட ஜியோ பயனாளர்களுக்கு ₹35,100 மதிப்புடைய Google Gemini Pro திட்டத்தை 18 மாதங்கள் இலவசமாக வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது இந்தியா முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியாக கூறப்படுகிறது. மேலும், ஜியோ நிறுவனத்தின் ஏஐ தொலைநோக்கு பார்வையின் முக்கிய கட்டமாகவும் இது பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட ஜியோ பயனாளர்கள் மட்டுமல்லாமல், அன்லிமிட்டெட் 5G பிளான் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களும் சேர்ந்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஜியோ–கூகுள் ஏஐ திட்டத்தில் இணையுவதன் மூலம் பல சேவைகள் கிடைக்கின்றன. அவை: Gemini 2.5 Pro மாடல் உள்ளிட்ட மேம்பட்ட ஏஐ தொழில்நுட்ப அணுகல், Gemini Nano, Gemini Pro, Gemini Ultra போன்ற பல்வேறு மாதிரிகளைப் பயன்படுத்தும் வாய்ப்பு, படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்கும் வசதி (VO 3.1 வழியாக), மேலும் பல ஏஐ டூல்களை சுலபமாக பயன்படுத்தக்கூடிய திறனும் இதில் அடங்கும்.
அதுமட்டுமல்லாமல், கல்வி மற்றும் ஆராய்ச்சிக்காக LMAI நோட்புக் சேவை, 2TB கிளவுட் சேமிப்பு, மற்றும் பிற சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
இந்த சேவையில் இணைய விரும்புபவர்கள் MyJio செயலியில் உள்ள “Pro Plan of Google Gemini – Free” என்ற விருப்பத்தை தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்கலாம். மேலும் “Claim Now” என்பதைக் கிளிக் செய்வதன் மூலமும் திட்டத்தைச் செயல்படுத்தலாம்.
ஏற்கனவே Gemini Pro சந்தாதாரராக இருக்கும் பயனாளர்கள், தங்களின் தற்போதைய சந்தா காலம் முடிந்ததும், ஜியோவின் வழியாக இலவச சேவையாக அதே Pro திட்டத்தைப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு இந்தியாவில் ஏஐ சேவைகள் இலவசமாக வழங்கப்படும் “AI ஆண்டு” எனப் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஏர்டெல், ஓபன்ஏஐ போன்ற நிறுவனங்களும் இதேபோன்ற இலவச ஏஐ சலுகைகளை வழங்கி வருகின்றன. உதாரணமாக, ஓபன்ஏஐ தனது ChatGPT Go AI சேவையை நவம்பர் 4 முதல் ஒரு ஆண்டுக்கு இலவசமாக வழங்கவுள்ளது.
இந்த திட்டம் நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். அதாவது, ஏஐ ஹார்ட்வேர் ஆக்ஸிலரேட்டர்கள், வணிக தீர்வுகள் மற்றும் Google Gemini Enterprise தளத்தை ஜியோவின் Reliance Intelligence கூட்டாண்மையின் கீழ் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, “கூகுள் போன்ற நீண்டகால கூட்டாளர்களுடன் இணைந்து இந்தியாவை ஏஐ வழிநடத்தப்படும் மற்றும் அதிகாரமளிக்கப்பட்ட நாடாக மாற்றுவதே எங்களின் நோக்கம்,” என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல், கூகுள் மற்றும் ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை கூறியதாவது: “இந்த அறிவிப்பு மூலம் கூகுளின் அதிநவீன ஏஐ கருவிகளை இந்திய நுகர்வோர்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் டெவலப்பர்கள் அனைவரும் எளிதில் பயன்படுத்த முடியும்.
5ஜி இணைப்பை ஏஐ திறனோடு இணைப்பதன் மூலம் மில்லியன் கணக்கான இளம் இந்தியர்கள் மேம்பட்ட டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்தி கல்வி, படைப்பாற்றல் மற்றும் புதுமை துறைகளில் முன்னேற முடியும்,” என்றார்.






