Home தொழில்நுட்பம் மின்வாகன ஓட்டிகள் கவனிக்கவும்! மழைக்கால பாதுகாப்பு விதிகள் இதோ

மின்வாகன ஓட்டிகள் கவனிக்கவும்! மழைக்கால பாதுகாப்பு விதிகள் இதோ

1
0

மழைக்காலங்களில் மின்சார வாகனங்களை பாதுகாப்பது குறித்து நிபுணர்கள் சில முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்ததனால் மின்சார வாகனங்களின் பயன்பாடு நாடு முழுவதும் வேகமாக அதிகரித்து வருகிறது. ஆனால் அவற்றை முறையாக பராமரிப்பது குறித்த விழிப்புணர்வு இன்னும் குறைவாகவே உள்ளது.

குறிப்பாக மழைக்காலங்களில் தீவிபத்துகள் மற்றும் வாகனக் குறைபாடுகளைத் தவிர்க்க வாகன ஓட்டிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தயாரிப்பாளர்கள் கூறுவதன்படி, மின்சார வாகனங்களில் உள்ள மோட்டார், கண்ட்ரோலர், பேட்டரி, சார்ஜர் மற்றும் இணைப்புகள் அனைத்தும் தூசி மற்றும் நீர் எதிர்ப்பு திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

சில வாகனங்கள் 1 மீட்டர் ஆழமான நீரில் 30 நிமிடங்கள் வரை செயல்படக்கூடியவையாகவும் உள்ளன. எனவே வாகனம் வாங்கும் போது அது IP67 தரச்சான்று பெற்றதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

மழையில் நனைந்த வாகனத்தை உடனே பயன்படுத்தக் கூடாது. முழுமையாக உலர்ந்த பிறகே இயக்க வேண்டும். குறைந்தது இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை வாகனத்தை உலர விடுவது நல்லது.

பின்னர் அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட மெக்கானிக் அல்லது சர்வீஸ் மையத்துக்குக் கொண்டு சென்று, வாகனத்தின் பேட்டரி மற்றும் இணைப்புகள் அனைத்தும் முறையாக உலர்ந்துள்ளதா எனச் சரிபார்க்க வேண்டும்.

இதனால் ஷார்ட் சர்க்யூட் போன்ற அபாயங்களைத் தவிர்க்கலாம்.வாகனத்தை இயக்கிய உடனே சார்ஜ் செய்யக் கூடாது, ஏனெனில் பேட்டரி சூடாக இருக்கும். குறைந்தது ஒரு மணி நேரம் குளிர்ந்த பிறகே மழை புகாத கூரையின் கீழ் சார்ஜ் செய்ய வேண்டும்.

குறிப்பாக NMC (Nickel Manganese Cobalt) வகை பேட்டரிகளில் வெடிக்கும் அபாயம் அதிகமாக இருப்பதால், ஆட்டோ கட்ட்ஆஃப் (Auto Cut-off) அமைப்பு சரியாக செயல்படுகிறதா எனச் சரிபார்க்க வேண்டும். மேலும் வாகனத்தில் பழுது ஏற்பட்டால் நாமே பிரித்து பார்க்காமல் உரிய பயிற்சி பெற்ற மெக்கானிக்கிடம் கொடுத்து சரி செய்ய வேண்டும்.

மின்சார வாகனங்களில் “ஷாக் அடிக்கும்”, “எரியும்” போன்ற வதந்திகள் இருந்தாலும், அவை பெரும்பாலும் தவறான சார்ஜர் பயன்பாடு அல்லது மின் இணைப்புகள் சரியாக இல்லாமை காரணமாக ஏற்படுகின்றன.

சார்ஜர் தரமும், பயன்படுத்தப்படும் மின்சார சாக்கெட் மற்றும் பவர் சப்ளை ஆகியவை சரியாக உள்ளதா என உறுதி செய்தால் எந்தவித பிரச்சனையும் ஏற்படாது.

வீட்டு மின்சார சாதனங்களுக்குப் போலவே, மின்சார வாகனங்களுக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றினால் மழைக்காலத்திலும் எந்த சிக்கலும் இல்லாமல் பாதுகாப்பாகப் பயன்படுத்தலாம் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here