
வங்கதேசத்தின் டாக்கா நகரிலுள்ள ஹஸ்ரத் ஷாஜல் சர்வதேச விமான நிலையத்தில் இன்று பயங்கரமான தீவிபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக விமான நிலையம் முழுவதும் கரும்புகையால் மூடப்பட்டு, அங்கு விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அந்த விமான நிலையத்தின் கார்கோ பகுதியில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தால் அங்கிருந்த கட்டிடங்கள் மற்றும் கிடங்குகள் புகையால் சூழப்பட்டுள்ளன. தீ பரவியதும் உடனடியாக தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து, தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.
சுமார் பத்து தீயணைப்பு வண்டிகள் தற்போது தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. தீ பரவல் மிகுந்திருப்பதால், அந்த பகுதி முழுவதும் அடர்ந்த புகைமண்டலமாக மாறியுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக, டாக்கா விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வங்கதேச அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில், “தீயணைப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்த பிறகே விமான நிலையம் வழக்கமான பணிகளைத் தொடங்கும்,” எனவும் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, டாக்காவிலிருந்து புறப்படும் மற்றும் டாக்காவுக்கு வரவிருந்த அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
தீவிபத்து ஏற்பட்ட காரணம் மற்றும் சேதத்தின் அளவு குறித்து அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.






