
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு தனக்கே வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். நோபல் பரிசு வழங்கப்படாவிட்டால், அது அமெரிக்காவை அவமதிக்கும் செயல் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
ஆனால், இம்முறை அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா சமூக செயற்பாட்டாளர் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தி நிலவுகிறது.
தகவலின்படி, நோபல் பரிசுக்கான பரிந்துரைகள் பெறும் காலம் முடிந்த பிறகே ட்ரம்பின் பெயர் பரிந்துரைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் தேர்வாகாமல் போனதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இஸ்ரேல், பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகள் பிப்ரவரி மாதத்திற்குப் பிறகே டிரம்பை பரிந்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து நோபல் கமிட்டியின் உறுப்பினரான ஜோர்கன் வாட்னே கூறியதாவது –
“ஒவ்வொரு ஆண்டும் அமைதிக்கான நோபல் பரிசுக்காக ஆயிரக்கணக்கான கடிதங்களையும் பரிந்துரைகளையும் நாங்கள் பெறுகிறோம். அரசியல் அழுத்தங்கள் அல்லது ஊடகச் செய்திகள் எங்கள் முடிவுகளை பாதிக்காது. எங்கள் தீர்மானங்கள் முழுமையாக தன்னாட்சி, நேர்மை, மற்றும் ஆல்பர்ட் நோபலின் நோக்கங்களின் அடிப்படையில் எடுக்கப்படுகின்றன,” என அவர் தெரிவித்தார்.
இந்த விளக்கத்தின் மூலம், நோபல் கமிட்டி தனது முடிவுகள் எந்தவொரு வெளிப்புற அழுத்தத்தாலும் பாதிக்கப்படாது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது.






