
2025ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு நார்வே நாட்டின் ஓஸ்லோ நகரில் அமைந்துள்ள தேர்வு குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த வெனிசுலா பெண் போராளி மரியா கொரினா மச்சாடோவுக்கு இவ்வாண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
வெனிசுலாவில் நீண்டகாலமாக நிலவி வரும் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மக்கள் உரிமைக்காக போராடி வந்தவர் மரியா கொரினா மச்சாடோ. 2012ஆம் ஆண்டு வெனிசுலா அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் இவர். 1967ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி வெனிசுலாவின் கராகஸ் நகரில் பிறந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமைதிக்கான நோபல் பரிசு பெறுவோரில் யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்புக்கிடையில், தேர்வு குழுவால் மரியா கொரினா மச்சாடோவுக்கு பரிசு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பலமுறை கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், பல நாடுகளில் போர் நிலைப்பாடுகளை மாற்றியதாகவும், போர் நிறுத்தங்களை ஏற்படுத்தியதாகவும் கூறியிருந்த டிரம்ப் இவ்வாண்டு பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை.
அமைதிக்கான நோபல் பரிசுக்கு மொத்தம் 338 பேர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் வெனிசுலா நாட்டைச் சேர்ந்த பெண் போராளி மரியா கொரினா மச்சாடோவுக்கே 2025ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருப்பது சிறப்புக்குரியதாகும்.





