
உலகின் புகழ் பெற்ற மற்றும் பழமையான அருங்காட்சியகங்களில் முக்கியமானது லூவர் அருங்காட்சியகம். பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ் நகரில் இந்த அருங்காட்சியகம் உள்ளது.
இந்த புகழ் பெற்ற அருங்காட்சியகத்திற்கு தினசரி 30ஆயிரம் பேர் வந்து செல்கிறார்கள். 33ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழமையான பொருட்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஓவியங்கள் சிற்பங்கள் என எண்ணற்ற பொக்கிஷங்கள் இங்கு உள்ளது.
இந்த அருங்காட்சியகத்திற்கு சிறப்பே மோனாலிசாவின் ஓவியம்தான். இந்த அருங்காட்சியகத்தில் பலமுறை கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.
1911 ஆம் ஆண்டு மோனாலிசா ஓவியத்தை முன்னாள் ஊழியர் தனது ஆடையில் மறைத்து எடுத்துக்கொண்டு திருடிச் சென்றார். பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இத்தாலியில் அது மீட்கப்பட்டது.
1983ஆம் ஆண்டு ரெனாசான்ஸ் காலத்தை சேர்ந்த ராணுவ கவசமும் திருடப்பட்டது. அதை கடந்த 2021ஆம் ஆண்டு மீட்டிருக்கிறார்கள். இதன் தொடர்ச்சியாக 1998ஆம் ஆண்டு ஒரு ஓவியம் திருடப்பட்டது. அதையும் மீட்டிருக்கிறார்கள்.
இதுவரை இந்த மியூசியத்தில் மூன்று முறை கொள்ளை நடந்திருக்கிறது. கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் இந்த மியூசியத்தில் ஒரு துணிகர கொள்ளை நடந்திருக்கிறது.
இது பாரிஸ் நகரத்தை மட்டுமின்றி பிரான்ஸ் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. இந்த கொள்ளையில் பிரான்ஸ் நாட்டின் மாவீரன் மன்னர் நெப்போலியனுக்கு சொந்தமான நெக்லஸ் உள்ளிட்ட நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரான்ஸ் நாட்டின் சில பழமையான பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கொள்ளை சமவத்தன்று காலை 9:30 மணி அளவில் அரங்கேறியுள்ளது.
கொள்ளையர்கள் மியூசியத்திற்கு கீழே நடைபெற்று வந்த கட்டுமான பணிகள் வழியாக ஹைட்ராலிக் ஏணி மூலமாக அருங்காட்சியகத்தின் கேலரியின் உள்ளே நுழைந்துள்ளனர். அங்குதான் நெப்போலியனுக்கு சொந்தமான மற்றும் நெப்போலியன் காலத்து நகைகள் இருந்துள்ளது.
பின்னர் சில கருவிகள் மூலமாக கண்ணாடிகளை உடைத்து பொருட்களை திருடி சாதுரியமாக தப்பியுள்ளார்கள். பேரரசர் நெப்போலியன் மற்றும் பேரரசி ஜோசபின் ஆகியோரின் நகை சேகரிப்பிலிருந்து ஒரு நெக்லஸ் மற்றும் ஒரு பப்ரூச் உட்பட ஒன்பது நகைகள் திருடப்பட்டுள்ளது.
இந்த நகைகள் 1804ஆம் ஆண்டு நெப்போலியனின் முடிசூட்டு விழாவிற்கு பிறகு சேர்க்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் மிக்கவை. இதில் நெப்போலியன் ஆட்சி காலத்தில் ஐரோப்பிய அரச குடும்பங்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட அரிய பொருட்களும் அடக்கம்.
இந்த கொள்ளை சம்பவத்தால் அருங்காட்சியகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக் கிழமை என்பதால் ஆர்வமுடன் அருங்காட்சியகத்தை காண வந்த மக்கள் இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்தார்கள். குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து அவர்களிடம் உள்ள பொருட்களை மீட்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.





