
நம்ம பூமியில் தண்ணீரும் எண்ணெயும் ஒன்றாக சேருமா? நிச்சயமாக சேராது. இது வேதியலின் ஒரு அடிப்படை விதி.“Like dissolves like” — அதாவது ஒரே மாதிரியான பண்புகளுள்ள பொருட்கள்தான் ஒன்றோடொன்று கரையும்.
ஆனால் இந்த விதியையே முறியடித்துள்ளது சனி கிரகத்தின் மிகப்பெரிய நிலவான டைட்டன். நாசா விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஒரு ஆய்வில் இந்த நம்ப முடியாத உண்மை தெரியவந்துள்ளது.
விஞ்ஞானிகள் ஆய்வகத்தில் டைட்டனின் மேற்பரப்பிலுள்ள சூழலை செயற்கையாக உருவாக்கினர். டைட்டனில் வெப்பநிலை சுமார் –183°C வரை குறையும். அந்த கடுமையான குளிரில், தண்ணீரைப் போன்ற துருவ (polar) மூலக்கூறுகளும், எண்ணெயைப் போன்ற துருவமற்ற (non-polar) மூலக்கூறுகளும் ஒன்றோடொன்று கலந்து திடமான படிகங்களாக மாறுவதை அவர்கள் கண்டறிந்தனர்.
இது வேதியலின் அடிப்படை விதிகளுக்கு முற்றிலும் எதிரானது. இந்த கண்டுபிடிப்பு ஏன் இவ்வளவு முக்கியமானது என்றால் — இது டைட்டனின் விசித்திரமான நிலப்பரப்புகளைப் பற்றி நமக்கு புரிந்துகொள்ள உதவும். அங்கே உள்ள ஏரிகள், கடல்கள், மணல் திட்டைகள் ஆகியவை எவ்வாறு உருவானது என்பதை வெளிச்சமிட்டுக் காட்டக் கூடும்.
ஆனால் இதைவிட பெரிய ஆச்சரியம் இன்னும் ஒன்றிருக்கிறது. இந்த கலவையில் ஹைட்ரஜன் சைனடைடு (Hydrogen Cyanide) என்ற வேதிப்பொருள் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த ஹைட்ரஜன் சைனடைடு உயிரினங்கள் உருவாவதற்கு தேவையான அமினோ அமிலங்கள் மற்றும் நியூக்ளியோபேஸ்கள் போன்ற மூலக்கூறுகள் உருவாகக் காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
அதாவது, டைட்டன் போன்ற கடுமையான, உயிர்கள் வாழவே முடியாத சூழலில் கூட, உயிர்கள் தோன்றுவதற்கான வேதியல் எப்படி தொடங்குகிறது என்பதைப் புரிந்துகொள்ள இந்த கண்டுபிடிப்பு ஒரு முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது.
இது வேற்று கிரகங்களில் உயிர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த நமது ஆராய்ச்சியில் ஒரு புதிய, உற்சாகமான அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.





