
ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெப்ட் (Rosneft) மற்றும் லுக்கோயில் (Lukoil) மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளால், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், அரசு நடத்தும் சுத்திகரிப்பு நிறுவனங்கள் இப்போதைக்கு இடைத்தரகர்கள் மூலம் ரஷ்ய எண்ணெய் கொள்முதலைத் தொடர வாய்ப்பு உள்ளது.
உக்ரைனில் நடைபெற்று வரும் போருக்கான பதிலாக, ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியில், ரஷ்யாவின் இரண்டு முன்னணி எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெப்ட் மற்றும் லுக்கோயில் மீது அமெரிக்கா கடுமையான தடைகளை விதித்துள்ளது.
இதையடுத்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ரஷ்யாவின் ரோஸ்நெப்ட்டிலிருந்து நீண்டகால எண்ணெய் இறக்குமதியை நிறுத்தும் அல்லது குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குபவரான அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், ரஷ்யாவிலிருந்து தினசரி இறக்குமதி செய்யப்படும் 1.7 மில்லியன் பீப்பாய்களில் சுமார் பாதியை கொண்டுள்ளது.
இருப்பினும், ரஷ்யாவின் ரோஸ்நெப்ட்டிலிருந்து நேரடியாக கச்சா எண்ணெய் வாங்கி வந்ததால், அதன் இறக்குமதி கொள்கையை ரிலையன்ஸ் மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும்.
முன்னதாக, டிசம்பர் 2024-ல் ரிலையன்ஸ் ரஷ்யாவின் ரோஸ்நெப்ட்டுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அந்த ஒப்பந்தத்தின் படி, 25 ஆண்டுகள் வரை தினசரி 5 லட்சம் பீப்பாய்கள் ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுகிறது.
அரசு சொந்தமான சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரோஸ்நெப்ட் அல்லது லுக்கோயிலுடன் எந்தவொரு நிலையான அளவு அல்லது நீண்டகால ஒப்பந்தமும் கொண்டிருக்கவில்லை. அவை பொதுவாக டெண்டர் முறையில் ரஷ்ய எண்ணெயை வாங்குகின்றன.
ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை நிறுத்துவது அல்லது குறைப்பது குறித்து இந்திய அரசு இதுவரை எந்த அறிவுறுத்தலையும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கவில்லை.
அதே நேரத்தில், இனி இந்தியா மெல்ல மெல்ல ரஷ்யா எண்ணெய் வாங்குவதை குறைக்கும் என்று டிரம்ப் கூறியிருந்தார். ஆனால் இதுகுறித்து இந்திய அரசு இதுவரை எந்த விளக்கத்தையும் வழங்கவில்லை.
முன்பு இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தொடங்கி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரை, “இந்தியாவின் தேசிய நலனை கருத்தில் கொண்டு ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவது தொடரும்” என்று பலமுறை தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், டிரம்பின் முடிவைத் தொடர்ந்து ரிலையன்ஸ் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை காத்திருந்து பார்க்க வேண்டியிருக்கிறது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் இதுகுறித்து பேசும்போது, “ரஷ்ய எண்ணெய் இறக்குமதிகளை மறுசீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன; மேலும், இந்திய அரசின் வழிகாட்டுதல்களுக்கு ரிலையன்ஸ் முழுமையாக இணங்கும்” என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.






