
கிழக்கு லடாக் எல்லையில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு (LAC) நெடுகிலும் அமைதி மற்றும் நிலைத்தன்மையை பராமரிக்க இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா–சீனா லடாக் எல்லை பிரச்சனை, இரு நாடுகளுக்கும் இடையே பல தசாப்தங்களாக நீடித்து வரும் நீண்டகால சர்ச்சையாகும். குறிப்பாக, லடாக் பகுதியில் உள்ள எல்லையை சீனா தனது சொந்தப் பகுதியில் சேர்த்துக்கொள்ள முயல்வதே இப்பிரச்சனையின் முக்கிய காரணமாகும்.
எல்லை பகுதியிலுள்ள உண்மையான கட்டுப்பாட்டு கோடு (LAC) தெளிவாக வரையறுக்கப்படாததால், தொடர்ந்து இரு நாடுகளுக்கும் எல்லை தொடர்பான பிரச்சனைகள் எழுந்து வருகின்றன.
2020 ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற கடுமையான மோதலில் இரு தரப்பினருக்கும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. அந்த சம்பவம் இந்தியா–சீனா உறவில் பெரிய விரிசலை ஏற்படுத்தியது.
அதன் பின்னர், இரு நாடுகளும் எல்லை பிரச்சனைகளைத் தீர்க்க ராணுவ மற்றும் ராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தைகளை தொடங்கின. 2024 அக்டோபரில் கிழக்கு லடாக்கில் ரோந்து நடவடிக்கைகள் தொடர்பாக சில முக்கிய ஒப்பந்தங்கள் எட்டப்பட்டன. இதனால் பதற்றம் குறைவதற்கும், இரு தரப்பினரின் படைகள் சில பகுதிகளில் இருந்து விலகுவதற்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், லடாக் எல்லை பிரச்சனை தொடர்பாக இரு நாடுகளின் உயர்மட்ட ராணுவ அதிகாரிகளுக்கு இடையேயான கமாண்டர் நிலை பேச்சுவார்த்தை அக்டோபர் 25 அன்று இந்திய எல்லையில் உள்ள மொல்டோ–சுசுல் பகுதியில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில், LAC நெடுகிலும் நிலவும் பிரச்சனைகளைத் தீர்க்க ஏற்கனவே உள்ள வழிமுறைகளைத் தொடர்ந்து பயன்படுத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். மேலும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் ஏற்ற முக்கிய ஒருமித்த கருத்தின் வழிகாட்டுதலின் கீழ், ராணுவம் மற்றும் ராஜதந்திர வழிகளின் மூலம் தொடர்ந்த தொடர்பு மற்றும் உரையாடலை பராமரிக்கவும், அமைதி மற்றும் நிலைத்தன்மையை கூட்டாக பாதுகாக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
கடந்த ஆண்டு அக்டோபரில், கிழக்கு லடாக்கில் நான்கு ஆண்டுகளாக நீடித்த ராணுவ மோதல்களுக்கு முடிவுக் கட்டப்பட்ட பிறகு, இரு நாடுகளின் உறவுகளை இயல்பு நிலைக்கு கொண்டுவர பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகியோருக்கிடையில் நடைபெற்ற சிறப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்கு பிறகு நடந்த முதல் ராணுவ அளவிலான சந்திப்பு இதுவாகும்.
எல்லையில் மோதல் புள்ளிகளிலிருந்து படைகள் விலகியிருந்தாலும், இரு தரப்பினரும் LAC நெடுகிலும் சுமார் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வீரர்களை இன்னும் நிறுத்தி வைத்துள்ளனர்.





