உலகத்தையே சிரிக்க வைத்த நகைச்சுவையின் பேரரசர் சார்லி சாப்ளின், தனது சிரிப்பின் பின்னால் ஆழமான வாழ்க்கைத் தத்துவத்தை மறைத்து வைத்திருந்தார். அவர் கூறினார் — “சிரிப்புதான் உங்கள் வலிகளிலிருந்து உங்களை விடுவிக்கும் ஒரே மருந்து.” தனது வாழ்வில் அளவில்லா துன்பங்களை அனுபவித்தபோதிலும், அவற்றை வெளிப்படுத்தாமல் எப்போதும் சிரித்த முகத்துடன் வாழ்ந்தார்.
“என் வாழ்வில் மிகுந்த துன்பங்கள் இருந்தாலும், அது என் உதடுகளுக்கு தெரியாது; அவை எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும்,” என்று அவர் கூறியுள்ளார். சாப்லின் நம்பிக்கை, “உன் மனம் வலிக்கும் போது சிரி, பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வைய்.” வாழ்க்கையில் எவ்வளவு துன்பம் வந்தாலும் அதை எளிதாக எடுத்துக்கொண்டால் மட்டுமே வெற்றி நம்மைத் தேடி வரும் என்பதில் அவர் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார்.
பணத்தின் மதிப்பு குறித்து அவர் சிந்தித்தபோது, “மனிதர்கள் பணத்துக்காக உலகம் முழுவதும் ஓடி உழைக்கிறார்கள், ஆனால் நிம்மதியை தொலைத்துவிடுகிறார்கள்,” என்று கூறினார்.
பணம் நமக்கு எல்லாவற்றையும் கொடுக்கலாம், ஆனால் வறுமை நம்மிடமிருந்து எடுத்த சிலவற்றை பணத்தால் திருப்பி தர முடியாது என்றார். இந்த உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை — நம் பிரச்சனைகளும், கூட நிரந்தரம் அல்ல என்றார் சாப்லின்.
அவர் மேலும் சொன்னார், “ஆசைப்படுவதை மறந்துவிடு, ஆனால் ஆசைப்பட்டதை மறந்துவிடாதே.” வாழ்க்கையைப் பற்றி அவர் கூறிய ஆழமான வரி — “வாழ்க்கை தொலைவில் இருந்து பார்க்கும்போது மகிழ்ச்சிகரமானது, அருகிலிருந்து பார்க்கும்போது மிகவும் துயரமானது.” அவர் சிந்தனையின் ஆழத்தில் கூறினார்,
“நீங்கள் எப்போதும் கீழே பார்த்துக்கொண்டிருந்தால், வானவில்லை காணமாட்டீர்கள்.” மனிதர்கள் தங்களை தாமே இழிவாக நினைப்பதுவே உலகின் பெரிய பிரச்சனை என அவர் உணர்ந்தார். “உங்களை நீங்களே நம்புங்கள் — அதுதான் ரகசியம்,” என்றார் சாப்லின். அவர் மேலும் நினைவூட்டினார், “நீங்கள் சிரிக்காத நாளெல்லாம், நீங்கள் வீணாக்கிய நாட்களே.”
மனிதநேயத்தைப் பற்றி அவர் கூறியதாவது — “ஒருவரை மதிப்பிடும்போது, அவர் தன்னுடன் சமமானவர்களை எப்படி நடத்துகிறார் என்பதைக் காணாதீர்கள்; தன்னை விட தாழ்ந்தவர்களை எப்படி நடத்துகிறார் என்பதையே பாருங்கள்.”
கண்ணாடியைப் பற்றி அவர் கூறிய வரிகள் இன்னும் நினைவில் நிற்கின்றன: “கண்ணாடியே என் சிறந்த நண்பன்; ஏனெனில் நான் அழும்போது அது சிரிப்பதில்லை.” மேலும் அவர் வலியுறுத்தினார், “அறிவு கூர்மையை விட நமக்கு அதிகம் தேவை — இரக்க உணர்வும் கண்ணியமும்.”
அவரின் நகைச்சுவையின் பின்னால் இருந்த உண்மை மிகவும் ஆழமானது. “எனக்கு மழையில் நடப்பது பிடிக்கும், அப்போதுதான் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது,” என்று அவர் கூறினார்.
“சிரிப்பைப் போல நடிக்க முடியும், ஆனால் நிம்மதியாய் இருப்பதைப் போல நடிக்க முடியாது,” என்ற அவரது வார்த்தைகள் வாழ்க்கையின் உண்மையை வெளிப்படுத்துகின்றன. சாப்லின் நம்பிக்கை, “நகைச்சுவை என்பது தனக்காக மட்டும் அல்ல, பிறருக்காகவும் இருக்க வேண்டும்.”
வாழ்க்கையைப் பற்றிய அவரது இறுதி சிந்தனை எப்போதும் நினைவில் நிற்கும்: “வாழ்க்கை அற்புதமானதாக இருக்க முடியும்; நீங்கள் அதைப் பற்றி பயப்படவில்லை என்றால்.” மேலும் அவர் கூறினார், “தீங்கு விளைவிக்க அதிகாரம் தேவை; ஆனால் நல்லதைச் செய்ய அன்பே போதுமானது.”
சிரிப்பின் பின்னால் வலியும், வலியின் பின்னால் தத்துவமும் இருந்தது — அதையே உலகிற்கு கற்றுக் கொடுத்தவர் சார்லி சாப்லின். அவரின் வார்த்தைகள் இன்று கூட நம்மை சிரிக்க வைக்கின்றன, சிந்திக்க வைக்கின்றன, முக்கியமாக மனிதநேயத்துடன் வாழ கற்றுக்கொடுக்கின்றன.






