
குவாண்டம் கணினி துறையில் ஒரு புதிய சாதனையை கூகுள் நிறுவனம் பதிவு செய்துள்ளது. அதன் “வில்லோ” என்ற குவாண்டம் சிப் மூலம் உருவாக்கப்பட்ட “குவாண்டம் எக்கோஸ்” (Quantum Echoes) என்ற புதிய அல்காரிதம், தற்போதைய கிளாசிக்கல் சூப்பர் கம்ப்யூட்டர்களை விட 13,000 மடங்கு வேகமாக செயல்படுகிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, எக்ஸ் (முன்பு ட்விட்டர்) தளத்தில் இதை அறிவித்து, “எங்கள் வில்லோ சிப் இதுவரை உருவாக்கப்பட்ட முதல் சரிபார்க்கக்கூடிய (Verifiable) குவாண்டம் அட்வான்டேஜ் பெற்றது. இதை நாங்கள் ‘குவாண்டம் எக்கோஸ்’ என்று அழைக்கிறோம். இது உலகின் மிகச் சிறந்த கிளாசிக்கல் அல்காரிதத்தை விட 13,000 மடங்கு வேகமாக இயங்குகிறது,” என்று கூறினார்.
இந்த அல்காரிதம் நியூக்ளியர் மேக்னெட்டிக் ரெசோனன்ஸ் (NMR) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஒரு மூலக்கூறில் உள்ள அணுக்களுக்கு இடையிலான தொடர்புகளை விளக்க முடியும். இதன் மூலம் மருந்து கண்டுபிடிப்பு, மெட்டீரியல் சயின்ஸ் போன்ற துறைகளில் புரட்சியை ஏற்படுத்த முடியும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தை மேற்பார்வையிட்ட கூகுள் குவாண்டம் ஏஐயின் முன்னணி ஆராய்ச்சி அறிவியலாளர் டாம் ஓ’ப்ரையன், “இந்த சரிபார்ப்பு தன்மை என்பது ஒரு முக்கிய மைல்கல். இது உண்மையான உலகப் பயன்பாடுகளுக்கான பாதையில் ஒரு பெரிய முன்னேற்றமாகும்,” என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், புதன்கிழமை நியூயார்க் பங்குச் சந்தையில் ஆல்பபெட் (Alphabet) நிறுவனத்தின் பங்குகள் 2.4% வரை உயர்ந்தன என்று அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
குவாண்டம் கணினிகள், பாரம்பரிய கணினிகளைப் போல சிறிய சர்க்யூட்ஸ்களைப் பயன்படுத்தினாலும், அவை தொடர்ச்சியாக அல்லாது ஒரே நேரத்தில் (parallel) கணக்கீடுகளைச் செய்கின்றன. இதுவே அவற்றின் மிகப்பெரிய வேகத்திற்கான காரணமாகும்.
பல நிறுவனங்கள் குவாண்டம் கணினிகள் கிளாசிக்கல் கணினிகளை விட முன்னேற்றம் அடையும் என்று கூறி வந்தாலும், அவற்றின் நடைமுறை பயன்பாடுகளை அடையாளம் காண்வதே இன்னும் ஒரு பெரிய சவாலாக உள்ளது.
இந்த புதிய சாதனைக்காக டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், கூகுள் மற்றும் சுந்தர் பிச்சைக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.






