
உலகம் முழுவதும் மீண்டும் ஒரு லாக்டவுன் அச்சம் நிலவி வரும் நிலையில், மலேசியாவில் வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் அலை கவலைக்கிடமாக மாறியுள்ளது.
மலேசிய நாட்டில் இன்ஃப்ளூயன்ஸா A மற்றும் B வகை காய்ச்சல்கள் மிகுந்த வேகத்தில் பரவி வருவதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதுவரை நாடு முழுவதும் சுமார் 100 இடங்களில் இந்த காய்ச்சல் குழுவாகப் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மலேசியக் கல்வி அமைச்சகம் அதிரடி முடிவெடுத்து, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவித்துள்ளது. இதனால் சுமார் 6,000 மாணவர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது சாதாரண விடுமுறை அல்ல. இன்னும் சில வாரங்களில் நடைபெறவிருக்கும் நான்கு இலட்சம் மாணவர்கள் எழுதப்போகும் முக்கியமான பொது தேர்வுக்கு முன்பாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பது நிலைமையின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது.
சுகாதார அதிகாரிகள், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்தது 5 முதல் 7 நாட்கள் வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு மலேசியா சந்திக்கும் மிகப்பெரிய வைரஸ் பரவல் இதுவே என கூறப்படுகிறது.
இதன் பின்னணியில், அனைத்து பள்ளிகளிலும் முகக்கவசம் அணிதல், கூட்டமாகச் சேர்வதைத் தவிர்த்தல் உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்த விடுமுறை எப்போது முடியும், மாணவர்கள் எப்போது பள்ளிக்கு திரும்புவார்கள் என்ற விவரங்கள் குறித்து இதுவரை எந்த உத்தியோகபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. உலகம் முழுவதும் இந்த செய்தி ஒரு வித பதற்றத்தை உருவாக்கி வருகிறது.






