
லூவ்ரே மியூசியம் கொள்ளை: 100 விசாரணையாளர்கள் தீவிர விசாரணையில் – 2 பேர் கைது,பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள உலகப் புகழ்பெற்ற லூவ்ரே (Louvre) மியூசியத்தில் நடந்த கொள்ளை சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தற்போது 100க்கும் மேற்பட்ட விசாரணை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த கொள்ளையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரு நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் ஒருவரை விமான நிலையம் நோக்கி சென்றபோது போலீசார் கைது செய்ததாகவும், இன்னொருவரை பாரிஸ் நகரிலேயே கைது செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதே சமயம், கோட் சூட், ஹாட் தொப்பி, கோல் ஷூஸ், கையில் குடையுடன் ஒரு நபர் “ஹாலிவுட் டிடெக்டிவ்” தோற்றத்தில் மியூசியம் அருகே கண்டுபிடிக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
102 மில்லியன் டாலர் மதிப்புள்ள நகைகள் திருட்டு உலகின் மிகப் பழமையான மற்றும் முக்கியமான அருங்காட்சியகங்களில் ஒன்றான லூவ்ர் மியூசியம், 1793ஆம் ஆண்டு பிரெஞ்சு புரட்சிக்குப் பிறகு பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. தற்போது இதற்கு 232 ஆண்டுகள் பழமை. இதற்கு முன்பு இது அரச அரண்மனையாகவும், அதற்கு முன்பு 1190ஆம் ஆண்டு கோட்டையாகவும் பயன்பட்டது.
அத்தகைய வரலாற்று சிறப்புமிக்க இடத்தில், 102 மில்லியன் டாலர் (சுமார் ₹900 கோடி) மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. திருடப்பட்ட பொருட்களில், நெப்போலியன் தனது மனைவி ஆஸ்திரியாவின் மேரி லூயிஸுக்கு திருமண பரிசாக அளித்த, 100க்கும் மேற்பட்ட மரகதங்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வைரங்களும் கொண்ட நெக்லஸ், அதனுடன் பொருந்திய காதணிகள் உள்ளிட்ட மொத்தம் ஒன்பது அரிய வரலாற்றுப் பொருட்கள் அடங்கும்.
7 நிமிடங்களில் நடந்த கொள்ளை திருடர்கள் நால்வர், காலை நேரத்தில், மின்சார பராமரிப்பு வண்டி (lift truck) ஒன்றைப் பயன்படுத்தி, மியூசியத்தின் முதல் மாடியில் உள்ள “அப்பலான் கேலரி” பகுதிக்குச் சென்றனர். அவர்கள் ஆரஞ்சு மற்றும் பச்சை நிற பாதுகாப்பு உடைகள் அணிந்திருந்ததால், அவர்கள் மியூசியத்தின் தொழில்நுட்ப பணியாளர்கள் என பாதுகாப்பு பணியாளர்கள் நினைத்தனர்.
அங்கு சென்று கேஸ் ப்ளூ டார்ச் மற்றும் செயின்சா போன்ற கருவிகளைப் பயன்படுத்தி கண்ணாடியை உடைத்து நகைகளை திருடினர்.இந்த ஹேஸ்ட் வெறும் 7 நிமிடங்களில் முடிந்தது. பின்னர் திருடர்கள் திருடிய பொருட்களுடன் ஸ்கூட்டர்களில் தப்பிச் சென்றனர். தப்பிச் செல்லும் போது ஒரு கிரீடம் கீழே விழுந்து சேதமடைந்தது, அதை போலீசார் மீட்டனர்.
முன்னைய சம்பவங்கள் மற்றும் பாதுகாப்பு குறைபாடு லூவ்ர் மியூசியத்தில் இது முதல் திருட்டு அல்ல. 1911ஆம் ஆண்டு வின்சென்சோ பெரூஜியா என்ற நபர், பிரபலமான மோனாலிசா ஓவியத்தை திருடி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இத்தாலியில் பிடிபட்டார்.
அதன்பின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டாலும், 2024ஆம் ஆண்டில் மோனாலிசா ஓவியத்தின் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவமும் சர்ச்சையாக இருந்தது. இதனால் பாதுகாப்பு குறைபாடு குறித்து மீண்டும் விமர்சனங்கள் எழுந்தன.
தற்போதைய நிலை இப்போதைய கொள்ளை சம்பவம் தொடர்பாக 100 விசாரணை அதிகாரிகள் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கொள்ளை நடந்தபோது பயன்படுத்தப்பட்ட பொய்யான பதிவு எண் கொண்ட லிப்ட் ட்ரக் சம்பவத்துக்கு ஒன்பது நாட்களுக்கு முன் போலியான பெயரில் வாடகைக்கு எடுக்கப்பட்டது என பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விசாரணையில் இன்னும் பல புதிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.






