
வரவிருக்கும் நவம்பர் 5-ஆம் தேதி, நம் வானத்தில் ஒரு அற்புதமான, மறக்க முடியாத காட்சி காத்திருக்கிறது. வானத்தை ரசிக்க விரும்புகிறவர்கள், புகைப்படம் எடுக்க ஆர்வமுள்ளவர்கள் — இந்த நாளை உங்கள் காலண்டரில் அவசியம் குறிச்சு வையுங்கள்!
ஏனெனில் அந்த நாளில் தோன்றப்போகிறது ஒரு சூப்பர் மூன் — அதுவும் இந்த ஆண்டின் மிகப்பெரிய சூப்பர் மூன்!
இது ஏன் இவ்வளவு சிறப்பானது என்றால், நவம்பர் 5-ஆம் தேதி (புதன்கிழமை), நிலா பூமிக்குத் மிகவும் அருகில் வரும். அது சுமார் 3,57,000 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும்.
இதனால் அந்த நாளில் தெரியும் முழுநிலா, சாதாரண முழுநிலாவை விட பெரிதாகவும் அதிக பிரகாசமுடனும் இருக்கும்.
இதுதான் 2025ஆம் ஆண்டின் மிகப்பெரிய மற்றும் பூமிக்கு மிக நெருக்கமான முழுநிலா எனக் கூறப்படுகிறது.
வட அமெரிக்காவில், நவம்பர் மாதத்தில் தோன்றும் முழுநிலாவுக்கு “Beaver Moon” என்ற செல்லப்பெயர் உண்டு. அந்த காலகட்டத்தில் “பீவர்” எனப்படும் நீர்நாய், குளிர்காலத்திற்காக தனது அணைகளை கட்டத் தொடங்கும்; முழுநிலாவின் வெளிச்சத்தில் இரவு முழுவதும் அது வேலை செய்வதால், இதற்கு அந்த பெயர் வந்துள்ளது.
இதற்கு மேலும் Frost Moon, Snow Moon, Turning Moon, Mourning Moon, Dark Depths Moon போன்ற பெயர்களும் உண்டு.
சரி, சூப்பர் மூன் என்றால் என்ன?
அது மிகவும் எளிது. நிலா நம் பூமியை ஒரு நேரான வட்ட பாதையில் அல்ல, சிறிது “முட்டை வடிவ” (elliptical) பாதையில் சுற்றுகிறது. அதனால் சில சமயங்களில் நிலா பூமிக்குச் சற்றே அருகில் இருக்கும்; சில சமயங்களில் தொலைவில் இருக்கும்.
அந்த சுற்றுப்பாதையில் நிலா பூமிக்குத் தன்னுடைய மிக அருகிலுள்ள புள்ளியில் இருக்கும் போது, அது ஒரு முழுநிலா ஆக இருந்தால் — அதுவே சூப்பர் மூன் எனப்படுகிறது.
சூப்பர் மூன் என்பது சாதாரண முழுநிலாவை விட சுமார் 14% பெரிதாகவும், 30% அதிக பிரகாசமாகவும் தெரியும்.
நவம்பர் 5 புதன்கிழமை இரவு, சூரியன் மறைந்ததும் கிழக்கு வானில் இந்த பிரம்மாண்டமான நிலா உதயமாகும். இதைக் காண நீங்கள் டெலஸ்கோப் அல்லது பைனாக்குலர் எதையும் தேவையில்லை — உங்கள் வீட்டின் மொட்டை மாடியில் இருந்தாலோ, திறந்த வெளியில் நின்றாலோ இந்த அற்புதமான காட்சியை ரசிக்கலாம்.
ஆகையால் மக்களே, இந்த ஆண்டின் மிகப்பெரிய சூப்பர் மூனை பார்க்க தவறாதீர்கள்!






