
பூமியை பாதுகாக்க புறப்பட்ட குடும்பம் – 26 ஆண்டுகளாக கடலில் வாழும் சுவோரர் குடும்பத்தின் அசாதாரண வாழ்க்கை!
பூமியை பாதுகாக்கும் நோக்கில் கடலில் புறப்பட்ட இந்த குடும்பம் கடந்த 26 ஆண்டுகளாக படகிலேயே வாழ்ந்து வருகிறது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சுவோரர் (Scherer) குடும்பம், நார்வேயின் ட்ரம்சோவில் இருந்து 15 மீட்டர் நீளமுள்ள “பாச்சமாமா” என்ற படகில் தங்கியுள்ளனர்.
‘பாச்சமாமா’ என்றால் “பூமியின் தாய்” என்று பொருள். உண்மையிலேயே, இந்தக் குடும்பத்தின் வாழ்க்கை இயற்கையுடன் ஒன்றிணைந்ததாகவே உள்ளது.
டாரியோவும் அவரது மனைவி சபினும், வழக்கமான வாழ்க்கை முறையிலிருந்து விலகி, 1999-ஆம் ஆண்டில் இந்த கடல் பயணத்தைத் தொடங்கினர். டாரியோ ஒரு அனுமதிப்பெற்ற மலையேறும் வழிகாட்டி. அவர் ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள உயரமான மலையை ஏறிய அனுபவமுடையவர். அவரின் கனவு — “பூமியை பாதுகாக்க உலக மக்களை ஊக்குவிப்பது.”
பாச்சமாமா – அவர்களின் மிதக்கும் வீடு
இந்த 15 மீட்டர் நீளமுள்ள படகில்தான் எட்டு பேர் கொண்ட குடும்பம் வாழ்கிறது.
அவர்கள் வீடு சுமார் 20 சதுர மீட்டர் பரப்பளவிலேயே அமைந்துள்ளது.
சிறிய சமையலறை, குழந்தைகளுக்கான படுக்கையறை, குளியலறை, மற்றும் ஒரு சிறிய உணவறை — இதுவே அவர்களின் உலகம்.
அலைகள் பலத்திருக்கும்போது பாத்திரங்கள் கவிழாதபடி சமைக்கப்படக்கூடிய சிறப்பு அடுப்பு இங்கு பயன்படுத்தப்படுகிறது. காலை எட்டு மணி என்றால் குடும்பம் முழுவதும் ஒன்றாக காலை உணவு உட்கொள்கிறது.
தனிமை என்ற வார்த்தைக்கு இங்கு இடமில்லை — எல்லாம் பகிர்ந்து கொள்ளும் வாழ்க்கை. “எங்கள் குழந்தைகள் ஒருபோதும் தனியறை இல்லையென்று அல்லது பெரிய படுக்கை இல்லையென்று குற்றம் சொன்னதில்லை. அவர்கள் இதுவே இயல்பாகக் கற்றுக்கொண்டுள்ளனர்,” என்கிறார் சபின்.
கடலில் பிறந்த குழந்தைகள் – இயற்கையோடு வளர்ந்தவர்கள் சுவோரர் குடும்பத்தின் அனைத்து குழந்தைகளும் இந்த கடல் பயணத்தின்போதே பிறந்தவர்கள். அவர்களின் வயது 7 முதல் 20 வரை மாறுபடுகிறது. பெருமளவு போக்குவரத்து, சத்தம், திரைப்படங்கள் இல்லாத வாழ்க்கை — அதற்கு பதிலாக கடல்வாழ் உயிரினங்களுடன் இயற்கையோடு வளர்ந்த குழந்தைகள் இவர்கள்.
அவர்கள் கரையில் இருக்கும் நாட்களில் மட்டுமே பள்ளிக்கு செல்கிறார்கள்; இல்லையெனில் படகிலேயே வீட்டுக் கல்வி பெறுகிறார்கள்.
“நண்பர்களை பிரிவது எப்போதும் சோகம்தான்,” என்று டாரியோவின் மகன் ஆன்ரி கூறுகிறார். “ஆனால் கடல் பயணத்தின் போது நாம் பல புதிய நண்பர்களை பெறுகிறோம் – அதுவே எங்களுக்கு ஆறுதல்.”
பூமிக்காகச் செய்கிறார்கள் ஒரு பெரும் பணி சுவோரர் குடும்பம் வெறும் பயணிகளல்ல – சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரிப்பது அவர்களின் தினசரி பணியாகும். இதுவரை சுமார் 85,000 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை அவர்கள் அகற்றியுள்ளனர்.
அதுமட்டுமல்ல, தண்ணீரிலிருந்து DNA மாதிரிகளை எடுத்து, எந்த உயிரினங்கள் கடலில் வாழ்கின்றன என்பதையும் ஆய்வு செய்கிறார்கள். இதன் மூலம் உயிரியல் பன்முகத்தன்மையைப் புரிந்து கொள்ள உதவுகிறது.
இன்று அவர்கள் சுமார் 2.6 இலட்சம் கிலோமீட்டர் தூரம் கடலில் பயணித்துள்ளனர்.
“இந்த வாழ்க்கையை 25 ஆண்டுகள் தொடர்வோம் என ஒருபோதும் நினைக்கவில்லை. ஆனால் இப்போது இது எங்களது வாழ்க்கை முறையாகி விட்டது,” என்று டாரியோ பெருமையாக கூறுகிறார்.
கடலோடு இணைந்து, பூமிக்காக வாழும் இந்த குடும்பம், மனிதருக்கும் இயற்கைக்கும் இடையேயான உறவை நினைவூட்டும் ஒரு உண்மையான உதாரணமாக திகழ்கிறது.






