Home உலகம் “போர் முடிந்தது! இரு நாடுகளும் அமைதிக்காக கைகோர்த்தன”

“போர் முடிந்தது! இரு நாடுகளும் அமைதிக்காக கைகோர்த்தன”

1
0

இஸ்ரேல் – பாலஸ்தீன் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக நீடித்து வந்த போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இது, அந்தப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு மட்டுமல்லாமல், முழு உலக நாடுகளுக்கும் வரவேற்கத்தக்க ஒரு மகிழ்ச்சியான செய்தியாக பார்க்கப்படுகிறது.

போரின் தாக்கத்தால் குறிப்பாக பாலஸ்தீன மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறையால் கடும் பஞ்சநிலையும் உருவாகி, உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அமைதி ஏற்படுத்தும் முயற்சியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னெடுத்தார். பலமுறை பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதன் பின்னர், அந்த முயற்சிக்கு பலன் கிட்டி, இரண்டு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இந்த ஒப்பந்தம் எகிப்தில் நடைபெற்ற “காசா அமைதி உச்சி மாநாட்டில்” அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகி, உடனடியாக அமலுக்கு வந்தது. இதன் மூலம் முதற்கட்டமாக இருதரப்பினரும் அமைதி நிலைக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

போர் நிறுத்தத்தின் முதன்மை நிபந்தனையாக இருதரப்பினரும் பணைய கைதிகளை பரஸ்பரம் விடுவிக்க வேண்டும் என்பதாகும்.அதன்படி, ஹமாஸ் அமைப்பின் வசமிருந்த 48 இஸ்ரேல் கைதிகளில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மீதமுள்ளோரில் 7 பேர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மாறாக, இஸ்ரேல் வசமிருந்த 2000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீன கைதிகளில் சிலரை விடுவிக்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த கைதி விடுவிப்பு நிகழ்வு மிகுந்த உணர்ச்சி பூர்வமாக நடைபெற்றது. விடுவிக்கப்பட்டவர்கள் தங்கள் உறவினர்களுடன் மீண்டும் சேரும் தருணம், நாட்டின் தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் சமூக ஊடகங்களில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.

போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியாக, பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்க ஐந்து எல்லைப் பாதைகள் திறக்க இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் உணவு, மருந்து உள்ளிட்ட அவசியமான பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமைதி ஒப்பந்தம் முறையாக நடைமுறைப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த 200 அமெரிக்க வீரர்கள் காசா பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் அங்குள்ள நிலைமையை தொடர்ந்து கண்காணிப்பர் என கூறப்படுகிறது.

இவ்வாறு, இரண்டு ஆண்டுகளாக நீடித்து வந்த இஸ்ரேல் – பாலஸ்தீன் மோதல் முடிவுக்கு வந்திருப்பது, உலக நாடுகளின் மத்தியில் ஒரு நம்பிக்கையையும் அமைதியையும் உருவாக்கியுள்ளதாக சர்வதேச சமூகங்கள் மதிப்பிடுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here