
கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ளதை விட அதிகமாக புதிய வரி விதிக்கப்படும் என்று டொனால்ட் டிரம்ப் கூறியிருக்கிறார். போலி விளம்பர பிரச்சாரம் தொடர்பாக கனடாவுடனான அனைத்து வர்த்தக பேச்சு வார்த்தைகளும் முடித்துவிட்டதாக டிரம்ப் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப் அதிபராக பதவி ஏற்றதில் இருந்து வரிவிதிப்பு குறித்து பல்வேறு முடிவுகளை எடுத்து வருகிறார். குறிப்பாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் டொனால்ட் டிரம்ப் கனடா ஏற்றுமதி பொருள்களுக்கு 25% வரியையும் கனடாவிலிருந்து வரும் எரிசக்தி பொருட்கள் ஏற்றுமதிக்கு 10% வரியையும் விதித்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக ஆரஞ்சு சாறு, வேர்கடலை, வெண்ணை, வைன், மதுபானங்கள், பீர், காபி, உபகரணங்கள், ஆடைகள் மற்றும் பல பொருள்களின் மீது அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 30 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களுக்கு கனடா எதிர்வரியை விதித்தது.
எக்கு மற்றும் அலுமினியம் மீதான வரியை தொடர்ந்து கனடா, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எக்கு மற்றும் அலுமினிய பொருட்கள், கருவிகள், கணினிகள் மற்றும் சர்வர்கள், காட்சி மானிட்டர்கள், விளையாட்டு உபகரணங்கள் மீது 25% வரியை விதித்தது.
இந்நிலையில் தற்போது வரிவிதிப்பு தொடர்பாக அமெரிக்காவிற்கு எதிரான விளம்பரம் கனடாவின் ஒண்டாரியோ மாகாண அரசால் வெளியிடப்பட்டது. அதில் மறைந்த அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகன் வரிவிதிப்பால் அமெரிக்கா பாதிக்கப்படும் என கூறும் வீடியோ காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
1987ஆம் ஆண்டு ரீகன் வர்த்தகம் குறித்த வானொளி உரையின் மேற்கோள்களை இந்த விளம்பரம் பயன்படுத்தியது. அதனை அடுத்து, கன்னடா மற்றும் அமெரிக்க உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. போலி விளம்பர பிரச்சாரம் தொடர்பாக கன்னடாவுடனான அனைத்து பேச்சு வார்த்தைகளையும் முடித்து விட்டதாக டிரம்ப் கூறிய நிலையில் கனேடிய பொருள்களுக்கு வரிகளை 10% கூடுதலாக விதிப்பதாகவும் கூறியிருக்கிறார்.
விமர்சனத்திற்குள்ளான அந்த விளம்பரம் உடனடியாக அகற்றப்பட இருந்தது. ஆனால் அது ஒரு மோசடி என்று தெரிந்தும், உலகத்தொடரின் போது அதை ஒளிபரப்ப அனுமதித்தனர் என்று டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.






