இஸ்ரோ: தகவல் தொடர்பை மேம்படுத்த 48 செயற்கைக்கோள்கள் விண்ணில்; CMS-03 செயற்கைக்கோள் நவம்பர் 2 அன்று ஏவல் நாட்டின் தகவல் தொடர்பு சேவைகளை மேம்படுத்த இதுவரை இஸ்ரோ 48 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏற்றியுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு ஏவப்பட்ட ஜிஎஸாட்–7 (GSAT-7) செயற்கைக்கோளின் ஆயுட்காலம் விரைவில் முடிவடைய உள்ளது.
அதற்குப் பதிலாக சுமார் ₹1,600 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட அதிநவீன சிஎம்எஸ்–03 (CMS-03) என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.
இஸ்ரோவின் அறிவிப்பின்படி, இந்த செயற்கைக்கோள் எல்எவ்எம்–3 (LVM3) ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து நவம்பர் 2 அன்று விண்ணில் ஏவப்பட உள்ளது.
சிஎம்எஸ்–03 செயற்கைக்கோள் 4,400 கிலோ எடையைக் கொண்டது — இதுவரை புவிவட்ட பாதைக்காக அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்களில் இதுவே மிக அதிக எடையுடையது. இதில் விரிவுபடுத்தப்பட்ட மல்டி–பேண்ட் தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்கள் உட்பட பல அதிநவீன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த செயற்கைக்கோள் இந்திய ராணுவத்தின் கண்காணிப்பு பணிகளுக்காக பயன்படுத்தப்படும். இது இந்திய கடலோர எல்லைகளை கண்காணிப்பதுடன், போர்கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கு இடையேயான தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்தவும் உதவும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.






