
வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் கனரக வாகனங்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த வரி எப்போதிலிருந்து அமலுக்கு வருகிறது .
இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதிலிருந்து உலக நாடுகளின் மீது கடுமையான வரிகளை விதித்து வருகிறார். இதில் இந்தியாவிற்கு முதலில் 25% வரியை விதித்த டிரம்ப் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அபராதமாக மேலும் 25% வரியை விதித்தார்.
இதனால் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் இந்தியா மீது மொத்தமாக 50% வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா மீது மட்டுமல்லாமல் அவர் அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்கள் மீது கடுமையாக வரிவிதித்து வருகிறார்.
இதனால் உலக நாடுகள் அமெரிக்காவோடு வர்த்தகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. டிரம்பின் இந்த வரிவிதிப்பிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு அமெரிக்க நீதிமன்றங்களில் நடைபெற்று வருகிறது. இருப்பினும் வெளிநாடுகளில்லிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரிவிதிப்பை அவர் குறைந்த பாடில்லை.
சமீபத்தில் கூட மருந்து பொருட்களுக்கு 100% வரிவிதிப்பதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் தான் வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் கனரக வாகனங்களுக்கு 25% வரிவிதிப்பு நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் என்று டிரம்ப் அதிரடியாக அறிவித்திருக்கிறார்.
இது குறித்து தனது ட்ரூத் சோசியலில் பதிவிட்டுள்ள அவர் பிற நாடுகளில்லிருந்து அமெரிக்காவிற்குள் வரும் அனைத்து நடுத்தர மற்றும் கனரக வாகனங்களுக்கு நவம்பர் ஒன்றாம் தேதி முதல் 25% இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது என குறிப்பிட்டிருக்கிறார்.
இது தொடர்பாக அமெரிக்க வர்த்தக சபை வழங்கியுள்ள தரவுகளின் படி சுமார் இரண்டு மில்லியன் அமெரிக்கர்கள் கனரக மற்றும் டிராக்டர் ஓட்டுனர்களாக பணிபுரிந்து வருகின்றனர். மேலும் பலர் மெக்கானிக் மற்றும் துணை ஊழியர்களாக வேலை செய்து வருகின்றனர்.
சுங்க மதிப்பின் அடிப்படையில் அமெரிக்காவிற்கு கனரக வாகனங்களை இறக்குமதி செய்யும் பல்வேறு நாடுகளை இது பாதிக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர் பொருளாதார ஆய்வாளர்கள். வரி விதிப்பு எனக்கு பிடிக்கும் இது அற்புதமான வார்த்தை.
வரி எங்களை பணக்காரர்களாக மாற்றி இருக்கிறது என டிரம்ப் வெளிப்படையாக பேசி வரும் நிலையில், சமீபத்தில் அவர் சமையலறை மற்றும் கழிவரை உபகரணங்களுக்கு 50% வரியும் பர்னிச்சர்களுக்கு 30% வரியும் மருந்துகளுக்கு 100% வரியையும் சினிமாவிற்கு 100% வரியையும் விதித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது நவம்பர் 1 முதல் கனரக வாகனங்களுக்கான 25% வரி அமலுக்கு வரும் என்று தெரிவித்திருப்பது இன்னும் எதன் மீதெல்லாம் வரிவிதிக்க போகிறாரோ என்னும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.






