H-1B விசா கட்டணத்தை ஒரு இலட்சம் அமெரிக்க டாலராக உயர்த்திய சில வாரங்களுக்குப் பிறகு, அமெரிக்க அதிகாரிகள் வெளிநாட்டவர்களுக்கான பணி அனுமதி பத்திரங்களை தானாகவே நீட்டிக்கும் நடைமுறையை முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவித்துள்ளனர்.
இது பெருமளவிலான இந்திய குடியேற்றத் தாரர்கள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாட்டு ஊழியர்களை கட்டுப்படுத்தும் சமீபத்திய முயற்சியாக, அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை, வெளிநாட்டவர்களின் சரியான பரிசோதனை மற்றும் திரையிடலுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், பணி அனுமதி பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை நீட்டிக்கும் தானியங்கி நடைமுறையை முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவித்துள்ளது.
புதிய விதியின்படி, 2025 அக்டோபர் 30 அன்று அல்லது அதற்கு பிறகு தங்கள் EAD (Employment Authorization Document) ஐ புதுப்பிக்க விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கு இனி தானியங்கி நீட்டிப்பு வழங்கப்படாது என்று அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
ஒரு வெளிநாட்டவரின் வேலை அங்கீகாரம் அல்லது ஆவணங்கள் நீட்டிக்கப்படுவதற்கு முன்பு சரியான பரிசோதனையும், திரையிடலும் நிறைவடைவதை உறுதி செய்வது இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.
அமெரிக்காவில் பணிபுரிவது ஒரு உரிமை அல்ல, அது ஒரு சலுகை என்பதை அனைத்து வெளிநாட்டவர்களும் நினைவில் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) இயக்குநர் ஜோசப் எட்லோ தெரிவித்துள்ளார்.
H-1B விசா வைத்திருப்போரின் வாழ்க்கைத் துணைகள், L விசா வைத்திருப்போரின் வாழ்க்கைத் துணைகள், E விசா வைத்திருப்போரின் வாழ்க்கைத் துணைகள் மற்றும் அகதி நிலை பெற்றுள்ள வெளிநாட்டவர்கள் ஆகியோர் இந்த முடிவால் பாதிக்கப்படுவார்கள்.
இந்த புதிய விதியால், பணி அனுமதி புதுப்பிப்பு செயல்முறையில் தாமதங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் வெளிநாட்டவர்கள் வேலை செய்வதில் இடைவெளிகளை எதிர்கொள்ள நேரிடலாம் என்று அஞ்சப்படுகிறது.






