ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜப்பேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்து எட்டு நாட்கலே ஆன பச்சிளம் குழந்தை உயிரிழந்த நிலையில் மருத்துவர்களின் அலட்சியமே அதற்கு காரணம் என்று கூறி குழந்தையின் தந்தை மருத்துவமனை முன்பு உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் தனியார் கம்பெனியில் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி காவேரி இவருக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. மீண்டும் கருவுற்ற காவேரி கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசவத்திற்காக வாலாஜப்பேட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் காவேரிக்கு எட்டு மாதமான நிலையில் ஆபரேஷன் மூலமாக கடந்த எட்டு நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் எடை குறைவாக உள்ள காரணத்தினால் இன்குபேட்டரில் வைத்து மருத்துவமனை நிர்வாகம் குழந்தையை கவனித்து வந்தது.
இந்நிலையில் நேற்று இரவு குழந்தையை பார்த்துவிட்டு சென்ற உறவினர்கள் இன்று காலை வந்தபோது குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே எடைக்குறைவாக இருந்த குழந்தையை சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்கள் அலசியமாக செயல்பட்டதாக தெரிவித்த உறவினர்கள் குழந்தை உயிரிழந்ததற்கு மருத்துவமனை அலசிய போக்கே காரணம் என குற்றம் சாட்டினார்.
மேலும் இது குறித்து முறையாக தகவல் அளித்தாக மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து திடீரென குழந்தையின் தந்தை அஜித்குமார் தன் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினர்.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் முறையாக விசாரணை நடத்தி உரியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







