அமெரிக்காவின் நியூயார்க் நகர மகாவல்லப விநாயகர் கோவிலில் விநாயக சதுர்த்தி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.ஆண்டுதோறும் சிறப்பாக நடக்கும் இந்த திருவிழாவின் முதல் நாள் கொடியேற்றத்துடன் தொடங்கியதை ஏராளமானோர் தரிசித்தனர்.
தொடர்ந்து 10 நாட்கள் காலை மாலை என இரு வேளைகளிலும் விநாயகருக்கு சிறப்பு பூஜைகளுடன் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.ஆலய உள் பிரகாரத்தில் நாதஸ்வர இசை பின்னணியில் விநாயகர் ஊர்வலம் சதுர்த்தி விழாவுக்கு மேலும் சிறப்பு சேர்த்தது.
விநாயகர் அவதரித்த ஆவணி சதுர்த்தி நாளில் மகாதீபாராதனை பக்தர்களை சிலிர்க்க வைத்தது . உள்பிரகார வீதி உலா போன்றே கோவிலை சுற்றியுள்ள சன்னதி வீதிகளிலும் விநாயகர் ஊர்வலமாக வர அங்கு திரண்டிருந்தவர்கள் மெய்யுருகி வழிபட்டனர் .
விநாயக சதுர்த்தி விழாவின் முத்தாய்ப்பாக நடைபெற்ற தேரோட்டத்தின் போது பாரம்பரிய பரதநாட்டியம் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றியது.விழா என்றாலே ஆட்டம் பாட்டத்திற்கு பஞ்சம் இருக்காது விநாயக சதுர்த்தி விழாவில் அமெரிக்க வாழ் தமிழர்களின் நடனம் அந்த இடத்தையே மிளிரவைத்தது.








