பாகிஸ்தான் தனது சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டுமழை பொழிந்து கொன்று குவிப்பதாக ஐ.நாவில் இந்திய தூதர் ஷிதிஜ் தியாகி குற்றம் சாட்டினார். பாகிஸ்தானின் கைபர் பக்த்துன் கவா மாகாணத்துக்கு உட்பட்ட திரா பள்ளத்தாக்கில் அமைந்துள்ள மாத்ரேதாரா கிராமத்தில் அந்நாட்டு விமானப்படை நடத்திய தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் உட்பட 30 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தை மேற்கோள் காட்டி ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் பேசிய இந்திய தூதர் ஷிதிஜ் தியாகி தங்கள் சொந்த நாட்டு மக்களையே குண்டுவீசி கொன்று குவிக்கும் ஒரு நாடு இந்தியா மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக பாகிஸ்தானை மறைமுகமாக விமர்சித்தார்.
மேலும் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்துவிட்டு ஆபத்தான சூழலில் இருக்கும் அந்நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க பாகிஸ்தான் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே பாகிஸ்தானில் விமானப்படை தாக்குதலில் 30 பேர் உயிரிழந்ததற்கு அந்நாட்டின் மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.






