தமிழகத்தில் நடைபெற்ற கல்வி விழாவில், புதுமைப்பெண் திட்டம் பலரின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியமைத்துள்ளது என்பதை, பலர் உருக்கமாக பகிர்ந்தனர். அதில் ஒரு தாயும் , மாணவியும் ஆனவர் தனது வாழ்க்கைப் போராட்டக் கதையை உணர்ச்சிபூர்வமாகச் சொல்லி, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை கண்கலங்க வைத்தார்.
“என் அப்பா நான் இரண்டு வயதில் இருக்கும்போதே வெளிநாட்டுப் போனதால், என் அம்மா பத்தாம் வகுப்பு வரை படிக்க வைக்க மிகுந்த சிரமப்பட்டார். அதற்குப் பிறகு எனக்குக் கல்வி நின்றுவிட்டது. என் பிள்ளைகளுக்கு நான் அனுபவித்த துயரை வரக்கூடாது என்பதற்காக மாடு வளர்த்து வந்தேன். ஆனால் மனதிலோ படிக்க வேண்டும் என்ற ஆசை ஓயவில்லை,” என்று தொடங்கினார்.
அவர் தொடர்ந்து, “என் பையன் டிப்ளமோவில் சேர்ந்தபோதுதான் நானும் படிக்கலாம் என்று முடிவு செய்தேன். 17 ஆண்டுகள் கழித்து கல்லூரியில் சேர்ந்தபோது, ‘உங்களால் படிக்க முடியாது’ என்று பலர் சொன்னார்கள். ஆனால் இரண்டு மாதங்களுக்குள் வகுப்பில் முதலிடம் பிடித்து, என்னால் முடியும் என்று நிரூபித்தேன்,” எனக் கூறினார்.
படிப்பின் போது குடும்பத்திற்கு ஆதரவளிக்க முடியாத குறை வந்த போதும், புதுமைப்பெண் திட்டமும் மகளிர் உதவித்தொகையும் அவருக்குத் துணைநின்றது. “இந்த உதவித்தொகை கிடைத்த உடனே, குடும்பத்துக்கு ஆதரவளிக்க முடியாத குறையும், என் கணவருக்கு சுமையாக இருப்பேன் என்ற கவலையும் என்னைவிட்டு நீங்கிவிட்டது. இப்போது நானும் என் பையனும் ஒரே கல்லூரியில், ஒரே துறையில், ஒரே வகுப்பில் படிக்கிறோம்,” என்றார் பெருமையுடன்.
“வயது படிக்க தடை இல்லை; சாதிக்கவும் வயது தடை இல்லை. நான் அதைப் நிரூபித்து இருக்கிறேன். இன்று நான் பெற்றிருக்கும் இந்த வாய்ப்புக்கு முதலமைச்சர் ஐயாவிற்கும், என்னை உறுதுணையாக நிற்கும் என் மாமாவிற்கும், என் கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்களுக்கும் நன்றி,” எனக் கண்ணீர் மல்க நன்றியைத் தெரிவித்தார்.
இந்த உருக்கமான உரை, புதுமைப்பெண் திட்டம் எத்தனை பெண்களின் வாழ்க்கையில் கனவுகளுக்கு சிறகுகள் தந்திருக்கிறது என்பதை மீண்டும் வெளிப்படுத்தியது.








