Home தமிழகம் வெயிலில் உழைப்பு, உடலில் உலர்வு – விவசாயிகளுக்கு மறைந்திருக்கும் புதிய ஆபத்து!

வெயிலில் உழைப்பு, உடலில் உலர்வு – விவசாயிகளுக்கு மறைந்திருக்கும் புதிய ஆபத்து!

தமிழ்நாட்டில் விவசாயிகள் மத்தியில் சிறுநீரக செயலிழப்பு அதிகரித்து வருவதாக கிடைக்கப்பெறும் ஆய்வுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில்லிருந்து வெளியாகும் தி லான்செட் மருத்துவ இதழ் வெளியிட்டு உள்ள ஆய்வு கட்டுரைதான் இந்த அதிர்ச்சியை விதைத்து உள்ளது.

தமிழ்நாட்டில் 5.13 விழுக்காடு விவசாயிகளின் சிறுநீரக செயல் திறன் பாதிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமானோருக்கு இணைநோய்கள் எதுவும் இல்லை. நேரடியாக வெயிலில் வேலை செய்வதால் சிறுநீரக பாதிப்பு நேரிட்டிருக்கலாம். இதுதான் தி லான்செட் மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் சாராம்சம்.

2023ல் ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் சென்னை மருத்துவ கல்லூரியின் சிறுநீரகவியல் துறையினர் விவசாயிகளிடையே கள ஆய்வு நடத்தினர். மாநில உறுப்பு மாற்று ஆணையத்தின் செயலர் என். கோபாலகிருஷ்ணன் தலைமையிலான அந்த குழுவினர் 125 கிராமங்களில் 3350 விவசாய தொழிலாளர்களை ஆய்வுக்கு உட்படுத்தினர்.

அந்த ஆய்வில் 17 விழுக்காட்டுக்கும் அதிகமானோருக்கு சிறுநீரக பாதிப்பு கண்டறியப்பட்டது. மீண்டும் மூன்று மாதங்களுக்கு பிறகு மறு பரிசோதனை நடத்தியபோது அந்த விகிதம் 5.31 மூன்று ஒன்று விழுக்காடாக குறைந்தது.

அவர்களுக்கு சர்க்கரை நோய் உயர்ரத்த அழுத்தம் இதய பாதிப்பு மரபணு பாதிப்பு என எந்தவிதமான இணைநோய்களும் இல்லை. விவசாயிகள் நேரடியாக வெயிலில் பணியாற்றுவதால் சிறுநீரக செயல்திறன் பாதித்திருக்கலாம் என்று அந்த மருத்துவ குழு தெரிவித்திருக்கிறது.

இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் தான் தி லான்செட் மருத்துவ இதழ் ஆய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளது. நாள்தோறும் திறந்த வெளியில் அதிக வெப்பமான சூழலில் பல மணி நேரம் வேலை செய்யும் விவசாயிகள், பூச்சி மருந்து தெளிப்பவர்கள், கட்டுமான தொழிலாளர்கள், செங்கல் சூழை தொழிலாளர்கள், இரும்பு பட்டரை தொழிலாளர்கள், உப்பழ தொழிலாளர்கள், விற்பனை பிரதிநிதிகள் உள்ளிட்டோருக்கு உடலின் நீர்ச்சத்து விரைவில் குறைந்துவிடும். இதனால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு விரைவில் செயல் இழப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆரம்பத்தில் எந்தவித அறிகுறிகளையும் உணர முடியாது. எனவே நாள்தோறும் வெயிலில் அதிகமாக வேலை செய்வோர் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்து கொள்வதே தற்காப்புக்கான ஒரே வழி என்பது மருத்துவர்களின் அறிவுரை.

மேலும் சிறிய உடல்நல பாதிப்பு என்றாலும் யூரியா இரத்த அணுக்கள் பரிசோதனை கிரியேட்டினின் ஜிஎப்ஆர் உள்ளிட்ட சிறுநீர் இரத்த பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள்.