திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கடற்கரை பகுதியில் பக்தர்கள் இரவில் தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் இரவில் கோவில் பிரகாரங்கள் மற்றும் மண்டபங்களில் தங்கி கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். கடற்கரை பகுதியில் அமைந்துள்ள இந்த கோவில் பரிகார ஸ்தலமாகவும் சிறப்புப் பெற்றது.
இங்கு வருகிற பல பக்தர்கள் வழக்கமாக இரவில் கடற்கரை அருகே தங்கி, அதிகாலை கடல் மற்றும் நாடி கிணற்றில் புனித நீராடி சாமி தரிசனம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.
ஆனால் சமீப காலமாக அந்த பகுதியில் திருட்டு மற்றும் பிற குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதை அடுத்து, பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் கோவில் நிர்வாகம் புதிய நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை கடற்கரை பகுதியில் யாரும் தங்க அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், பக்தர்கள் தங்க விரும்பினால் கோவில் பிரகாரங்கள் மற்றும் மண்டபங்களில் தங்கி கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.







