கோவையில் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கல்லூரி மாணவி, சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளார். இந்த வழக்கை முக்கிய செய்தியாக தொடர்ந்து பார்த்து வரும் நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவியும் அவரது ஆண் நண்பரும் பத்திரமாக வீடு திரும்பியுள்ளனர்.
கோவை விமான நிலையம் அருகே இரவு நேரத்தில் 21 வயது கல்லூரி மாணவி, தனது காதலனுடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சதீஷ் எனும் கருப்புசாமி, அவரது தம்பி கார்த்திக் எனும் காளீஸ்வரன், மற்றும் தவசி ஆகியோர், காதலனை அரிவாளால் வெட்டிவிட்டு, மாணவியை பலவந்தமாக அழைத்து சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து பீலமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து, சதீஷ், கார்த்திக் மற்றும் தவசி ஆகிய மூவரையும் துப்பாக்கிச்சூட்டில் காயப்படுத்தி பிடித்தனர். காலில் காயம் அடைந்த இவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதேபோல, பாதிக்கப்பட்ட மாணவியும், வெட்டு காயம் அடைந்த அவரது காதலனும் அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். தீவிர சிகிச்சைக்குப் பிறகு இருவரும் தற்போது முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தவசி மற்றும் சதீஷ் குணமடைந்ததால், அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கார்த்திக் எனும் காளீஸ்வரனுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
காவல்துறை உயரதிகாரிகள் கூறுவதாவது: சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய கல்லூரி மாணவிக்கும், அவரது காதலனுக்கும் பாதுகாப்பு காரணங்களுக்காக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கார்த்திக்கு சிகிச்சை முடிந்து சிறைக்கு அனுப்பப்பட்ட பின்னர், அடையாள அணிவகுப்பு நடத்தப்படும். அதன் பிறகு மூவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கில் கைதான மூவர், கோவை கோவில்பாளையத்தில் நடந்த கொலைக்குவும் தொடர்பு கொண்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்த முழு விவரமும் விசாரணைக்கு பின்னரே வெளிச்சம் பார்க்கும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.







