Home உலகம் “ஓய்வில்லா வானம்… தாகத்தில் துடிக்கும் தேசம்”

“ஓய்வில்லா வானம்… தாகத்தில் துடிக்கும் தேசம்”

ஈரான் முழுவதும் உள்ள 19 பெரிய அணைகள் முற்றிலும் வரண்டுவிட்டன. கடந்த ஆண்டு மழைப் பதிவு 40% குறைவாக இருந்ததால், ஈரான் தற்போது கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான வறட்சியை எதிர்கொண்டு வருகிறது.

அணைகளின் கொள்ளளவு குறைந்து வருவதால், தலைநகர் தெஹ்ரான் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நீர் நெருக்கடி மோசமடைந்துள்ளது. மழையை வரவைக்க கிளவுட் சீடிங் முயற்சியை ஈரான் அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். பல ஆண்டுகளாக நாட்டில் நிலவி வரும் கடுமையான வறட்சியை சமாளிக்க, மழையை தூண்டுவதற்காக மேகங்களின் மீது சில்வர் அயோடைடு, பொட்டாசியம் அயோடைடு உள்ளிட்ட ரசாயனங்களை விமானங்கள் மூலம் தெளித்துள்ளனர்.

இந்த ரசாயனங்கள் நீர்துளிகள் உருவாகும் வேகத்தை அதிகரித்து மழை பெய்யும் வாய்ப்பை உயர்த்துகின்றன. நீர் பற்றாக்குறையை சமாளிக்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் இது பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படும் நுட்பமாகும். கிளவுட் சீடிங் எனப்படும் இந்த செயல்முறை சனிக்கிழமை உர்மியா ஏரிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. உர்மியா ஈரானின் மிகப் பெரிய ஏரியானது, ஆனால் தற்போது அது முற்றிலும் வறண்ட நிலையில் உள்ளது.

கிழக்கு மற்றும் மேற்கு அஜர்பைஜான் பகுதிகளிலும் மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன் தெஹ்ரான் நகரில் உள்ள ஒரு மசூதியில் நூற்றுக்கணக்கான மக்கள் மழைக்காக பிரார்த்தனையும் செய்துள்ளனர். ஈரானில் மழைப்பொழிவு வரலாறு காணாத அளவிற்கு குறைந்துள்ளது. நீர்தேக்கங்கள் கிட்டத்தட்ட காலியாகிவிட்ட நிலையில், கடந்த வாரம் அதிபர் மசூத் பெஷேஷ்கியன், விரைவில் போதுமான மழை கிடைக்காவிட்டால் தெஹ்ரானில் நீர் விநியோகம் ரேஷன் முறையில் நடைபெறக்கூடும் என்றும், தலைநகரிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட வேண்டிய நிலையும் உருவாகலாம் என்றும் எச்சரித்துள்ளார்.

அதிக அளவு தண்ணீர் பயன்படுத்தும் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும் திட்டத்தையும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஈரான் தேசிய வானிலை மையம் தெரிவித்ததாவது: நாடு முழுவதும் மழைப்பொழிவு நீண்டகால சராசரியுடன் ஒப்பிடும்போது சுமார் 89% குறைவாக பதிவாகியுள்ளது. இது கடந்த 50 ஆண்டுகளில் ஈரான் அனுபவித்த மிக மோசமான வறண்ட காலம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை நாட்டின் மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் சிறியளவு மழை பெய்ததாக ஈரானிய வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வறட்சிக்கு காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல காரணங்களை முன்வைத்தாலும், தண்ணீர் இன்றி தவிக்கும் மக்களுக்கு அது எந்த நிவாரணத்தையும் அளிக்கவில்லை. இந்த சிக்கலை மாற்றுவதற்கான நம்பிக்கையில், தற்போது ஈரான் முழுவதும் பிரார்த்தனைகளும் அதிகரித்துள்ளன.