நவம்பர் 27ஆம் தேதி மற்றொரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. நவம்பர் 20 முதல் 26ஆம் தேதி வரை, இந்த வியாழக்கிழமையிலிருந்து அடுத்த வியாழக்கிழமைக்குள், முதல் கட்டமாக 22ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி, 24ஆம் தேதி இது தாழ்வு மண்டலமாக மாறி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இப்போது இந்திய வானிலை ஆய்வு மையத்திலிருந்து அடுத்த இரண்டு வாரத்திற்கான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டதாவது, நவம்பர் 27ஆம் தேதி முதல் டிசம்பர் 3ஆம் தேதி வரை மற்றொரு காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி, அது தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்பதாகும்.
மேலும் அது தொடர்ந்து வலுப்பெறும் வாய்ப்பும் உள்ளதாக வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இந்த அமைப்பு உருவாகும் போது கடலோர ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் போன்ற பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் வருகிற நாட்களில் இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா என்பது குறித்து தற்போது உறுதியாகச் சொல்ல முடியாது. இது கடந்த பிறகு உருவாகும் 27ஆம் தேதி முதல் டிசம்பர் 3ஆம் தேதி வரை உருவாகக்கூடிய தாழ்வு மண்டலத்தின் போக்கையும் காத்திருந்து கவனிக்க வேண்டும்.
தற்போது 22ஆம் தேதி உருவாகவிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு பகுதி தமிழகத்தை நோக்கி நகரும் போது, தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழையும் சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக இன்று பிற்பகல் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காவேரிப் படுகை மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. இது கடந்த பிறகு, நவம்பர் 27 முதல் டிசம்பர் 3 வரை உருவாகும் தாழ்வு பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்பும் உள்ளது.
அது மேலும் தீவிரமடைந்து புயலாக மாறக்கூடிய சாத்தியமும் இருக்கிறது. ஆனால் அது புயலாக மாறுமா என்பதை இந்த தாழ்வு மண்டலம் உருவாகும் வரை காத்திருந்துதான் அறிய முடியும். தற்போது உருவாகவிருக்கும் தாழ்வு பகுதியே புயலாக வலுப்பெற்றால், அதற்கு ‘சென்யார்’ என்று பெயரிடப்படும்.
அந்த ‘சென்யார்’ புயல் சென்னை அல்லது தமிழகத்தை நோக்கி வரும் வாய்ப்பு உள்ளதா? அதற்கு பின்னர் உருவாகக்கூடிய அடுத்த அமைப்பும் நம்மை நோக்கி வருமா? என்பதையும் அடுத்தடுத்த கட்டங்களில் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.
இப்போதைக்கு மழையிலிருந்து சிறிய இடைவெளி கிடைத்துள்ளாலும், வரும் 22ஆம் தேதி முதல் தென் தமிழகத்திலும் காவேரிப் படுகை மாவட்டங்களிலும் மீண்டும் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வட தமிழகத்தில் மழை எப்படி இருக்கும் என்பதையும் காத்திருந்து பார்க்க வேண்டும். இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








