சேலம் கன்னங்குறிச்சி அரசு பள்ளி வகுப்பறையில் இரண்டு மாணவர்களை பாம்பு கடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த இரண்டு மாணவர்களின் உடல்நிலை எப்படி உள்ளது? பாம்பை பிடிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பதற்கான தகவல்கள் வெளியாகியுள்ளன.
சேலம் கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை மாணவர்கள் வழக்கம் போல் பள்ளிக்குள் சென்றுள்ளனர்.
அப்போது 11ஆம் வகுப்பில் படிக்கும் கவின்குமார் மற்றும் மணிபாரதி ஆகிய இரு மாணவர்கள் வகுப்பறையைத் திறந்து உள்ளே சென்றபோது, அங்கு இருந்த பாம்பை தெரியாமல் மிதித்துள்ளனர். இதனால் அந்த இரண்டு மாணவர்களையும் பாம்பு கடித்தது.உடனடியாக ஆசிரியர்கள் இருவரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தற்போது இந்த இரண்டு மாணவர்களும் எந்தவித ஆபத்துமின்றி நன்றாக உள்ளனர் என்று மருத்துவமனை தரப்பில் இருந்து உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சையளித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில், பள்ளி வளாகத்தில் சரியான பராமரிப்பில்லாமல் புதர்கள் மற்றும் புல்வெளிகள் நிரம்பியுள்ளதால் இத்தகைய அபாயங்கள் ஏற்படுகின்றன என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
பள்ளிக்கு அருகிலேயே இருப்பவர்கள், “பள்ளி வளாகத்தில் அடிக்கடி பாம்புகள் தோன்றுகின்றன; மாணவர்கள் உயிர் ஆபத்து அடையக்கூடும்” என கவலை தெரிவித்துள்ளனர். மேலும், பள்ளியை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகளவில் முற்புதர்கள் வளர் நிலையில் இருப்பது, மழைநீர் தேங்கி நிற்பது, குப்பைகள் குவிவது போன்ற காரணங்களால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதற்கு பேரூராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததே முக்கிய காரணம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதற்கு உடனடி தீர்வு தேவை என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது இரண்டு மாணவர்களும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் தேவையான அனைத்து சிகிச்சைகளையும் வழங்கி வருகிறது. எந்தவித பாதிப்பும் இல்லாமல் அவர்கள் நலமாக உள்ளனர் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் சேலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி வளாகத்திற்குள் இரு மாணவர்களை பாம்பு கடித்த இந்த சம்பவம் பெற்றோர் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.








