மோட்டார் வாகன புதிய சட்டத் திருத்தத்தின் படி, சொந்த பயன்பாட்டிற்காக வாங்கப்படும் வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு கொண்டு செல்ல வேண்டியதில்லை என்ற விதி இருந்தபோதிலும், அது தமிழகத்தில் அமல்படுத்தப்படவில்லை. இதனை எதிர்த்து ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
அந்த வழக்கின் விசாரணையில், நீதிபதி பிறப்பித்த உத்தரவின்படி நாளை முதல் சொந்த பயன்பாட்டிற்காக இருசக்கர வாகனங்களையோ மற்ற வாகனங்களையோ வாங்குவோர், பதிவு செய்வதற்காக ஆர்டிஓ அலுவலகத்திற்கு நேரடியாக செல்ல வேண்டியதில்லை என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு நாளை முதல் அமலுக்குவருகிறது. இதனால், தமிழகத்தில் புதியதாக சொந்த பயன்பாட்டிற்காக வாகனங்களை வாங்குவோர் பதிவு செய்வதற்காக ஆர்டிஓ அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டியதில்லை.
ஆனால் வணிக பயன்பாட்டிற்காக வாங்கப்படும் ஆட்டோ, கார்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு, பதிவு செய்வதற்காக ஆர்டிஓ அலுவலகத்திற்கு நேரில் செல்வது கட்டாயம் என்று சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இந்த உத்தரவும் நாளை முதல் அமலில் வருகிறது.
இந்த உத்தரவுகளை தமிழக போக்குவரத்து துறை ஆணையர் கஜலட்சுமி, அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கும் அறிவித்து உள்ளார். தற்போது தமிழகத்தில் உள்ள 150 ஆர்டிஓ அலுவலகங்களில் தினமும் சுமார் 8,000 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
இதில் சொந்த பயன்பாட்டிற்காக வாங்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை 3,000 முதல் 4,000 வரை இருக்கும். நாளை முதல் இந்த 3,000 முதல் 4,000 வரை உள்ள சொந்த பயன்பாட்டு வாகனங்களை வாங்குவோர் ஆர்டிஓ அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியதில்லை என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தமிழகத்தில் பல தரப்பினரின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை அமல்படுத்துவதற்காக தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்றம் வழங்கிய இந்த உத்தரவு நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதனால் நாளை முதல், உயர்நீதிமன்ற உத்தரவின்படி, சொந்த பயன்பாட்டிற்காக வாங்கப்படும் அனைத்து வாகனங்களும் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பதிவு செய்யலாம். ஆனால் வணிகப் பயன்பாட்டுக்கான வாகனங்கள் கட்டாயமாக வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வரவேண்டும் என்ற உத்தரவும் அமலுக்கு வருகிறது.
இதனால், தமிழக முழுவதும் நாளை முதல் சொந்த பயன்பாட்டிற்காக இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை வாங்கும் பொதுமக்கள் ஆர்டிஓ அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியதில்லை.








