19வது ஐபிஎல் தொடருக்கான ஏலம் வரும் 16ஆம் தேதி துபாயில் நடைபெற இருக்கிறது. ரசல், மேக்ஸ்வெல்லைத் தொடர்ந்து நட்சத்திர வீரர்கள் விலகி வருவதால், வெளிநாட்டு ஆல்–ரௌண்டர்களான கேமரூன் கிரீன், லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோருக்கு இந்த ஏலத்தில் டிமாண்ட் அதிகரித்திருக்கிறது.
குறிப்பாக கேமரூன் கிரீன் நல்ல ஃபார்மில் இருப்பதால், அவருக்காக கொல்கத்தா, சென்னை என இரு அணிகளும் 30 கோடி ரூபாய் வரை செலவிடலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஐபிஎல் நிர்வாகத்தின் புதிய விதிமுறை காரணமாக 30 கோடி வரை கிரீன் ஏலத்தில் போனாலும், அவருக்கு 21 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
அதாவது, ஐபிஎல் 2026 தொடருக்கான தக்கவைத்த வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர்களில் யார் அதிகபட்ச தொகைக்கு தக்கவைக்கப்பட்டுள்ளாரோ, அந்த வீரருக்கு வழங்கப்படும் தொகை தான் வெளிநாட்டு வீரர்களுக்கும் அதிகபட்சமாக வழங்கப்படும் என பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இந்த விதிமுறைப்படி 21 கோடி ரூபாய்க்கு விராட் கோலியை தக்கவைத்தது தற்போது அதிகபட்சமாக உள்ளது. எனவே அதே தொகைதான் கிரீனுக்கும் வழங்கப்படும் என்றும், மீதமுள்ள தொகையை பெங்களூரில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு வழங்க பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அத்துடன் இனிவரும் அனைத்து ஏலங்களிலும் இந்த விதிமுறையை அமல்படுத்தவும் பிசிசிஐ தீர்மானித்துள்ளது.








