Home உலகம் ரஷ்யா ஷாக்கில்! கோடி மோசடியின் நடுவில் துபாயில் மறைந்த பிரபல கிரிப்டோ தம்பதி!

ரஷ்யா ஷாக்கில்! கோடி மோசடியின் நடுவில் துபாயில் மறைந்த பிரபல கிரிப்டோ தம்பதி!

கிரிப்டோ கரன்சி தம்பதியாகப் பிரபலமான ரோமன் மற்றும் அண்ணா நோவக் ஆகியோர் டெலிகிராமில் கிரிப்டோ கரன்சி முதலீடுகள் குறித்து வழங்கிய அறிவுரைகளைக் கேட்டு கோடிக்கணக்கான பேர் அவர்களை பின்தொடர்ந்து வந்தனர். இதேபோல் இன்ஸ்டாகிராமிலும் இந்த தம்பதி மிகவும் பிரபலமானவர்கள்.

ரோமன் நோவக் 2020ஆம் ஆண்டு முதலீட்டு மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டில் ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். பின்னர் ஜாமீனில் வெளிவந்த அவர், தனது மனைவி அண்ணா நோவக்குடன் சேர்ந்து கிரிப்டோ கரன்சி தொடர்பான வீடியோக்களை வெளியிடத் தொடங்கினார். பின்னர் “பின்டோ பையோ” என்ற இணையதளத்தை உருவாக்கி அதில் கிரிப்டோ முதலீட்டாளர்களை ஈர்க்க ஆரம்பித்தனர்.

இதன் மூலம் ரஷ்யா, சீனா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த பல பணக்காரர்கள் பெருமளவில் முதலீடு செய்தனர். இதனால் பெற்ற பணத்தை பயன்படுத்தி துபாயில் குடியேறிய இந்த தம்பதி அங்கு செழுமையான வாழ்க்கையை வாழ்ந்து தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில், ரோமன் மற்றும் அண்ணா நோவக் தம்பதி துபாய்–ஓமன் எல்லை பகுதியில் உள்ள ஒரு மலை ரிசார்ட்டில் முதலீட்டாளர்களை சந்திக்கச் சென்றனர். அதன் பின்னர் அவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

ரஷ்யாவில் உள்ள உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டது. இதில், ரோமன் கடைசியாக தனது நண்பருக்கு ஒரு செய்தி அனுப்பியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதில் தானும், தனது மனைவியும் சிக்கலில் சிக்கியுள்ளதாகவும், அதிலிருந்து தப்பிக்க பெரிய தொகை தேவைப்படுவதாகவும் தெரிவித்திருந்தார். இதனால் தம்பதி பணத்திற்காக கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.

ரஷ்யா, ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளின் உதவியை கோரியது. அவர்களின் கைபேசி சிக்னல் கடைசியாக இருந்த இடத்தை அடிப்படையாகக் கொண்டு தீவிர தேடுதல் நடத்தப்பட்டது.

சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு, அந்த பகுதிக்கு அருகில் தம்பதியின் உடல்கள் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டன. இது சம்பவத்தைச் சுற்றி மர்மத்தைக் கூடுதலாக அதிகரித்தது.

அடுத்தடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இந்த தம்பதி நடத்திவந்த கிரிப்டோ முதலீட்டு தளத்தில் பல செல்வந்தர்கள் பணம் முதலீடு செய்திருந்தாலும், அவர்கள் ஏமாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

குறிப்பாக சீனா மற்றும் மத்திய கிழக்கு தொழிலதிபர்கள் சுமார் 4500 கோடி ரூபாய் வரை இழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களில் எவரேனும் பழிவாங்கும் நோக்கில் இந்தக் கொலைக்குப் பின்னால் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மேலும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாக ரஷ்யாவை சேர்ந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இருப்பினும் இந்தக் கொலைக்கான உண்மை காரணம் இன்னும் வெளிப்படையாக தெரியவில்லை.

இதற்கு முன்னர், சீனாவைச் சேர்ந்த ஷிமின் கியான், கிரிப்டோ முதலீடு என்ற பெயரில் 1,28,000 பேரிடம் இருந்து சுமார் 46,000 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்து லண்டனுக்கு தப்பிச் சென்றிருந்தார்.

பின்னர் அவர் கைது செய்யப்பட்டு சுமார் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். அந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 4500 கோடி ரூபாய் கிரிப்டோ மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தம்பதியின் மரணம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.