Home தமிழகம் “முழுக்க முழுக்க தமிழ் நாட்டு கட்டுப்பாட்டில் பறக்கும் ரயில்”

“முழுக்க முழுக்க தமிழ் நாட்டு கட்டுப்பாட்டில் பறக்கும் ரயில்”

சென்னை பறக்கும் ரயில் திட்டத்தின் 33% பங்குகளை தமிழ்நாடு அரசு வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் சென்னை பறக்கும் ரயில் திட்டத்தின் முழு கட்டுப்பாடும் தமிழ்நாடு அரசின் கையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை கடற்கரை மற்றும் பரங்கிமலை இடையிலான 25 கிலோமீட்டர் பறக்கும் ரயில் சேவையை இந்திய ரயில்வே தற்போது வழங்கி வருகிறது.

சென்னை மெட்ரோ நிறுவனத்தில் 67% பங்குகளை கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, இந்திய ரயில்வேயிடம் ரூ.600 முதல் ரூ.700 கோடி வரை வழங்கி பறக்கும் ரயில் சேவையை முழுமையாகக் கைப்பற்ற உள்ளதென தெரிவிக்கப்படுகிறது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இம்மாதத்திலோ அல்லது ஜனவரி மாதத்திலோ கையெழுத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பறக்கும் ரயில் சேவையை முழுமையாகப் பொறுப்பேற்கும் இந்தியாவின் முதல் மாநிலமாக தமிழ்நாடு அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை பறக்கும் ரயில் சேவை திட்டத்திற்காக உலக வங்கியிடமிருந்து ரூ.4000 கோடி பெற தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதில் ரூ.1000 கோடி புதிய ரயில்கள் வாங்குவதற்காக செலவிடப்படும்.

திட்டப்பணிகள் முழுமையாக முடிவடைய இரண்டு ஆண்டுகள் ஆகும் என்றும், 2027 ஆம் ஆண்டில் மெட்ரோ தரத்திலான சேவையை பறக்கும் ரயில்களில் வழங்க முடியும் என்றும் அரசு தரப்பு தெரிவிக்கிறது.

சென்னை பறக்கும் ரயில் சேவை குறித்து 1970ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் திட்டம் வகுக்கப்பட்டு, 1984ஆம் ஆண்டு ஒப்புதல் பெற்று, 1995ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது.

தற்போது மு.க. ஸ்டாலின் ஆட்சியில் பறக்கும் ரயில் சேவை புதிய கட்டத்துக்குள் நுழைகிறது. இதற்கான பணிகளை விரைவுபடுத்த கடந்த மே மாதம் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தின்போது பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார்.

2047ஆம் ஆண்டுக்குள் ரூ.2,27,000 கோடி முதலீடு செய்வதன் மூலம் சென்னையின் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொது போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த ரயில்வே நிர்வாகத்துடன் இணைந்து தமிழ்நாடு அரசு பணியாற்றி வருகிறது.

இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், சென்னையின் சாலை போக்குவரத்து, புறநகர் ரயில் சேவை, பறக்கும் ரயில் சேவை மற்றும் மெட்ரோ ரயில் சேவை அனைத்தும் ஒருங்கிணைந்த வளர்ச்சியை அடையும் எனக் கூறப்படுகிறது.