துபாயிலிருந்து சென்னை வரும் விமானங்களில் பெருமளவில் கடத்தல் தங்கம் வருவதாகவும், அந்த கடத்தலில் விமான பணியாளர்கள் கூட ஈடுபட்டுள்ளதாகவும் சுங்கத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த நிலையில், துபாயிலிருந்து சென்னை வந்த எமிரேட்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இறங்கியது.
பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து இறங்கி சென்றனர். பின்னர் விமானத்தில் பணியாற்றிய ஆண் மற்றும் பெண் ஏர்ஹோஸ்டஸ்களும் கீழே இறங்கத் தொடங்கினர்.
அவர்களில் இரண்டு ஆண் ஏர்கோர்சஸ் மீது சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகம் கொண்டனர். அவர்களை நிறுத்தி விசாரித்தனர்.
அதே சமயம், விமான கேப்டனிடமிருந்து முறைப்படி அனுமதி பெற்று, அந்த இரண்டு பணியாளர்களையும் சுங்க அலுவலகத்திற்கு அழைத்து சென்று முழுமையாக பரிசோதனை செய்தனர்.
அவர்களின் உடலில் இடுப்பு, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டக்கூடிய வெல்க்ரோ ஸ்டிக்கர் பேண்டுகளை ஒட்டியிருந்தது. அவற்றை அகற்றி பார்த்தபோது வெள்ளை காகிதத்தில் மடக்கப்பட்ட 10 பார்சல்கள் இருந்தன. அவற்றின் உள்ளே தங்க பேசுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த தங்க பேசுகளை சுத்தம் செய்து எடை பார்த்தபோது மொத்தம் 9 கிலோ 460 கிராம் 24 காரட் தங்கம் பரிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து விசாரணை செய்தபோது, அதே விமானத்தில் பயணித்த ஒருவர் துபாயில் விமானம் புறப்படும் 4 மணி நேரத்திற்கு முன்பு இந்த தங்கத்தை இவர்களிடம் கொடுத்ததாகவும், அதை உடலில் ஒட்டி கொண்டு வந்ததாகவும் தெரியவந்தது.
இந்த விமான பணியாளர்கள் இருவரும் இந்தியர்கள் தான், ஆனால் தற்போது துபாயில் வசித்து வருவதாகவும் பதிவாயிற்று. இவர்கள் சென்னை விமான நிலையத்தில் பணியை முடித்த பின்னர், அருகிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கி, மறுநாள் காலை சென்னையிலிருந்து துபாய் செல்லும் அதே எமிரேட்ஸ் விமானத்தில் மீண்டும் பணிக்கு செல்ல இருந்தனர்.
விசாரணையில், தங்கத்தை அவர்களிடம் கொடுத்த பயணி மற்றும் தங்கத்தை பெற வர இருந்த சென்னை சார்ந்த இருவர், ஹோட்டலில் காத்திருந்ததாகவும் வெளிச்சமானது.
உடனடியாக சுங்கத்துறை அதிகாரிகள் அந்த ஹோட்டலுக்கு சென்று, அங்கு தங்கியிருந்த அந்த பயணியையும், தங்கத்தை வாங்க வந்த இருவரையும் கைது செய்தனர்.
இவ்வாறு மொத்தம் 9.46 கிலோ சுத்தமான தங்கம் (சர்வதேச மதிப்பு ரூ. 11.5 கோடி) பரிமுதல் செய்யப்பட்டது. விமான ஏர்கோர்சஸ் இருவர் உட்பட ஐந்து பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் சென்னை சுங்கத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் விசாரணைக்காக அவர்களை சுங்கத்துறை காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
சென்னை விமான நிலையத்தில் விமான பணியாளர்களே தங்கக் கடத்தலில் ஈடுபட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








