நாடு முழுவதும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு உதவியாக நியாயவிலை கடைகள் மூலம் உணவு பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் பயனாக பல கோடி குடும்பங்கள் அடிப்படை தேவைகளை எளிதாக பெறுகின்றனர். தமிழகத்தில் மட்டும் 3,322 நியாயவிலை கடைகளில் ஒவ்வொரு மாதமும் அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் 2.2 கோடி ரேஷன் அட்டைகள் வழியாக சுமார் 7 கோடி மக்கள் பயனடைகிறார்கள்.
ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு, இயற்கை பேரிடர் கால உதவி தொகை, மகளின் உரிமை தொகை போன்ற பல நலத்திட்டங்களையும் பெறுவதால், புதிய ரேஷன் அட்டையாகவும் திருத்தம் செய்ய மக்களின் வரிசை தொடர்ந்து நீள்கிறது.
இதனால் பலர் உணவு பொருள் வழங்கல் அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இந்த சூழலில் பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் நோக்கில், ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை ரேஷன் அட்டை திருத்த முகாம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, வரும் டிசம்பர் 13 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னையில் உள்ள உணவு பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் முகாம் நடைபெறும்.
முகாமில் கிடைக்கும் சேவைகள்:
- குடும்ப அட்டையில் பெயர் சேர்ப்பு, நீக்கம்
- முகவரி மாற்றம்
- கைபேசி எண் பதிவு
- நியாயவிலை கடைகளுக்கு நேரில் வர முடியாத மூத்த குடிமக்களுக்கு அங்கீகார சான்று வழங்கல்
- கடைகளின் செயல்பாடு அல்லது சந்தை பொருட்கள் தொடர்பான குறைகள் பதிவு செய்து தீர்வு பெறல்








