அவர் 1955 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தார். பிறந்த உடனே தத்தெடுக்கப்பட்ட குழந்தை அவர். “நான் யாருடைய பிள்ளை?” என்ற அடையாளக் குழப்பம் அவருக்குள் சிறு வயதிலிருந்தே இருந்தது.
ஆனாலும், அவரை வளர்த்த பெற்றோர் அன்போடு வளர்த்தார்கள். பள்ளிப் படிப்பில் அவர் மிகச் சிறந்த மாணவர் அல்ல. விதிகளைப் பிடிக்காதவர்.
கேள்வி கேட்பவர். “இதை ஏன் இப்படிச் செய்ய வேண்டும்?” என்று சிந்திப்பவர். இதுவே பின்னாளில் அவரின் மிகப் பெரிய பலமாக மாறியது.
கல்லூரியில் சேர்ந்தார்; ஆனால் சில மாதங்களிலேயே விட்டு விலகினார். படிப்பை விட்டு விட்டாலும், கற்றலை விட்டு விடவில்லை.
தனக்குப் பிடித்த பாடங்களை மட்டும் சென்று கேட்டார். எழுத்தழகியல், தியானம், கிழக்கு தத்துவம், எளிய வாழ்க்கை — இவை எல்லாம் அவரது சிந்தனையை வடிவமைத்தன. வாழ்க்கை என்பது சம்பாதிப்பதற்காக மட்டும் அல்ல; அது ஒரு கலை என்று அவர் நம்பினார்.
இளமையில் ஸ்டீவ் வோஸ்னியாக் என்ற நண்பருடன் சேர்ந்து, ஒரு கேரேஜில் (சிறிய குடிசையில்) ஆப்பிள் நிறுவனத்தை தொடங்கினார்.
கணினி என்பது பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே என்ற காலத்தில், “ஒவ்வொரு மனிதனின் மேசையிலும் ஒரு கணினி இருக்க வேண்டும்” என்று கனவு கண்டார். அந்தக் கனவின் முதல் வடிவமே Apple I, Apple II. உலகம் அவரைப் பார்த்து சிரித்தது. ஆனால் அவர் கனவை விடவில்லை.
ஆப்பிள் வளர்ந்தது. ஸ்டீவ் ஜாப்ஸ் உலகப் புகழ் பெற்றார். ஆனால் அதே ஆப்பிள் நிறுவனத்திலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார். தன் சொந்த நிறுவனத்திலேயே “நீ தேவையில்லை” என்று சொல்லப்பட்ட தருணம் அது. பலருக்கு அது முடிவாக இருந்திருக்கும். ஆனால் ஸ்டீவ் ஜாப்ஸுக்கு அது ஒரு புதிய தொடக்கம்.
அந்த காலகட்டத்தில் அவர் NeXT என்ற நிறுவனத்தை தொடங்கினார். Pixar என்ற சிறிய அனிமேஷன் நிறுவனத்தை வாங்கினார். அந்த Pixar தான் பின்னாளில் Toy Story போன்ற படங்களால் உலகையே வியக்க வைத்தது. அதே சமயம், அவர் தோல்வியிலிருந்து ஒரு பாடம் கற்றார் — “நான் எல்லாவற்றையும் தெரிந்தவன் அல்ல” என்று.
பல ஆண்டுகள் கழித்து, தோல்வியடைந்த நிலையில் இருந்த ஆப்பிள் நிறுவனம் மீண்டும் ஸ்டீவ் ஜாப்ஸை அழைத்தது. அவர் திரும்பி வந்தார். ஆனால் பழைய ஸ்டீவ் ஜாப்ஸ் அல்ல; அனுபவத்தால், தோல்வியால், பொறுமையால் வளர்ந்த ஸ்டீவ் ஜாப்ஸ்.
அதற்குப் பிறகு உலகம் கண்டது — iMac, iPod, iPhone, iPad.போன் என்பது பேசுவதற்காக மட்டும் அல்ல;இசை கேட்பது, இணையம் பயன்படுத்துவது, வாழ்க்கையை எளிதாக்குவது — எல்லாம் ஒரே கருவியில் இருக்கலாம் என்று அவர் நிரூபித்தார்.
அவரின் சிறப்பு என்னவென்றால், அவர் தொழில்நுட்பத்தை மனிதர்களுக்காக மாற்றினார். அழகும், எளிமையும், பயன்பாடும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று பிடிவாதமாக நம்பினார். “பொருள் எப்படி வேலை செய்கிறது என்பதோடு, அது எப்படி உணர வைக்கிறது என்பதும் முக்கியம்” என்றார்.
அவரின் வாழ்க்கை தத்துவம் மிக எளிமையானது.
“நீங்கள் வாழும் வாழ்க்கை மற்றவர்களுடைய கனவுகளை நிறைவேற்றுவதற்காக அல்ல.”
“உங்களுக்குப் பிடித்ததைச் செய்யுங்கள்.”
“தோல்வி வந்தால் பயப்படாதீர்கள்; அது உங்களை வடிவமைக்கும்.”
ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் அவர் பேசினார்:
“Stay Hungry, Stay Foolish” —
எப்போதும் கற்றுக்கொள்ள ஆசை வைத்திரு,
எப்போதும் புதிதாக சிந்திக்க தயங்காதே.
வாழ்க்கையின் கடைசி காலத்தில் கடுமையான நோயை சந்தித்தார். ஆனால் மரணத்தைப் பற்றியும் அவர் பயப்படவில்லை.
“மரணம் வாழ்க்கையின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு” என்றார்.
ஏனெனில் அது தான் நம்மை உண்மையாக வாழத் தூண்டுகிறது.
ஸ்டீவ் ஜாப்ஸ் இறந்தாலும், அவர் விட்டுச் சென்ற சிந்தனை இன்னும் உயிரோடு இருக்கிறது.
அவர் சொன்னது போல —“உலகத்தை மாற்ற முடியும் என்று பைத்தியக்காரத்தனமாக நம்புகிறவர்களே, உண்மையில் உலகத்தை மாற்றுகிறார்கள்.”








