Home தமிழகம் “விவசாயம் வாழ்வியல் முறை – நம்மாழ்வார் நினைவு தினத்தில் விவசாயிகள் குரல்”

“விவசாயம் வாழ்வியல் முறை – நம்மாழ்வார் நினைவு தினத்தில் விவசாயிகள் குரல்”

இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வாரின் 12ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

இதை ஒட்டி, அவர் வாழ்ந்த வீட்டின் முன் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது திருவுருவப் படத்திற்கு கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

“விவசாயம் என்பது வியாபார முறை அல்ல, அது ஒரு வாழ்வியல் முறை” என்றும், “விதைகள் தான் விவசாயிகளின் பேராயுதம்” என்றும் உறக்க கூறிய இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் 12ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள இலங்காடு கிராமத்தில், நம்மாழ்வார் வாழ்ந்த வீட்டின் முன்பாக அவரது திருவுருவப் படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் அவரது படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வின்போது, மறைந்த நம்மாழ்வாருக்கு உலக அதிசயமான கல்லணை பகுதியில் நினைவு மண்டபம் கட்ட வேண்டும் என்றும், தஞ்சை மையப் பகுதியில் முழு உருவச் சிலை அமைக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தினர்.

மேலும், நம்மாழ்வார் எழுதிய இயற்கை வேளாண்மை தொடர்பான நூல்கள் மற்றும் அவர் குறித்த ஆய்வுகளை மக்கள் பார்வைக்கு வைக்கும் வகையில் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்றும், அவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கி கௌரவிக்க வேண்டும் என்றும் தமிழக அரசிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நினைவு தினத்தன்று இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் என எதிர்பார்த்ததாகவும், அரசு இந்த கோரிக்கைகளில் தாமதம் காட்டுவது ஏன் எனத் தெரியவில்லை என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.