Home தமிழகம் சைக்கோ மியூசிக் பார்ட்டிக்கு போதை பொருள்? சென்னையில் 5 பேர் கைது

சைக்கோ மியூசிக் பார்ட்டிக்கு போதை பொருள்? சென்னையில் 5 பேர் கைது

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு போதைப் பொருள் விற்பனை செய்ததாக, ஐடி ஊழியர் உள்ளிட்ட ஐந்து பேர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புனித தோமையார் மலை பகுதியில் போதைப் பொருள் விற்பனை நடமாட்டம் நடைபெறுவதாக, போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில், அதிக அளவில் ஓஜி கஞ்சா மற்றும் மெத்தடோன் மாத்திரைகள் உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்ததாக, மொத்தம் ஐந்து நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஐடி ஊழியர் எனவும், மற்றவர்கள் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, மகாபலிபுரம் பகுதியில் ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவர் “சைக்கோ மியூசிக் பார்ட்டி” என்ற நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருந்ததாக தெரிய வந்துள்ளது.

அந்த சைக்கோ மியூசிக் பார்ட்டியில் கலந்து கொள்ளும் நபர்கள், ஓஜி கஞ்சா மற்றும் மாத்திரைகள் உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தி, போதை நிலையில் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க திட்டமிட்டிருந்ததாக போலீசார் விசாரணையில் கண்டறிந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, மகாபலிபுரத்தில் நடைபெறவுள்ள அந்த நிகழ்ச்சியில் போலீசார் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போதைப் பொருட்களை பயன்படுத்தி யாரேனும் அந்த நிகழ்ச்சிக்கு வருகிறார்களா, அல்லது மகாபலிபுரம் பகுதிகளில் இதுபோன்ற போதைப் பொருள் பயன்பாடு நடைபெறுகிறதா என்பதைக் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புனித தோமையார் மலை போலீசார், கைது செய்யப்பட்ட ஐந்து பேரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை அடிப்படையாக கொண்டு, அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.