திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த அகரம் கிராமத்தைச் சேர்ந்த அருணா (வயது 27) பொன்னேரி வருவாய் வட்டத்தில் கிராம நிர்வாக அலுவலராக (விஓ) பணியாற்றி வந்தார்.
கடந்த 29ஆம் தேதி குடும்பத் தகராறு காரணமாக பெண் விஓ அருணா விஷமருந்திய நிலையில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை அருணா உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக திருப்பாலை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, திடீர் திருப்பமாக அருணாவுடன் பணியாற்றி வந்த சக விஓவான சிவபாரதி என்பவர் திருப்பாளவனம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகாரில், கடந்த இரண்டு ஆண்டுகளாக விஓவாக பணியாற்றி வருவதாகவும், அருணாவும் தாமும் காதலித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். தாம் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அருணாவின் குடும்பத்தினர் இந்த காதலை ஏற்கவில்லை என்றும், தம்மையும் அருணாவையும் அவரது குடும்பத்தினர் வற்புறுத்தி மிரட்டி வந்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும், அருணாவிற்கு வற்புறுத்தி விஷம் கொடுத்து கொலை செய்ததாகவும், அதற்குப் பொறுப்பு அவரது குடும்பத்தினருக்கே என்றும் சிவபாரதி தனது புகாரில் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த புகார் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், முதலில் தற்கொலை எனக் கூறப்பட்ட இந்த சம்பவம், தற்போது குடும்பத்தினரால் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், புகார் அளித்த சிவபாரதி, அருணா தம்முடன் பேசிய ஆடியோ பதிவுகள் உள்ளதாகவும், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அனுப்பிய செய்திகளும் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதில், தனது குடும்பத்தினரே தனக்கு பில்லு மருந்து (பூச்சிக்கொல்லி மருந்து) கொடுத்து உட்கொள்ள வற்புறுத்தியதாக அருணா கூறியதாகவும், அதற்கான ஆதாரங்களையும் காவல் துறையிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








