பராமரிப்பு பணிகள் காரணமாக பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள், வரும் ஏழாம் தேதி முதல் ராயபுரம் மற்றும் தீவு திடலில் இருந்து தற்காலிகமாக இயக்கப்பட உள்ளன.
இந்நிலையில், ராயபுரம் பேருந்து நிலையத்தில் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார். வரும் ஏழாம் தேதி முதல் பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வரும் பேருந்துகள், ராயபுரம் மற்றும் தீவு திடலில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து முனையங்களில் இருந்து இயக்கப்பட உள்ளன.
இதற்காக, இந்த இரண்டு இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ள பேருந்து முனையங்களை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சிஎம்டி துறைகளை சார்ந்த அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த பேருந்து முனையங்களில் பயணிகள் அமருவதற்கான இருக்கைகள், பேருந்துகளை நிறுத்துவதற்கான வசதிகள், வழித்தட தகவல் பலகைகள் உள்ளிட்ட அனைத்தும் முறையாக ஏற்படுத்தப்பட்டுள்ளதா, பொதுமக்கள் வந்து செல்ல ஏற்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளதா, கழிப்பறை, ஆவின் பாலகம், தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் முறையாக அமைக்கப்பட்டுள்ளதா என்பதைக் குறித்து அமைச்சர் சேகர் பாபு நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.
ராயபுரம் பேருந்து நிலையத்திலிருந்து காமாட்சி சாலை வழியாக அடையாறு, சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள், அதேபோல் அண்ணாசாலை வழியாக தாம்பரம், கே.கே.நகர், டி.நகர், கூடுவாஞ்சேரி, கிளாம்பாக்கம், பூந்தமல்லி, தரமணி, வானகரம், பழனி, அழகாபுத்தூர், குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்பட உள்ளன.
மேலும், தீவு திடல் பேருந்து முனையத்திலிருந்து மணலி, எண்ணூர், திருவொற்றியூர், வெள்ளிவாக்கம், ஆவடி, அம்பத்தூர், பெரம்பூர், அண்ணாநகர் உள்ளிட்ட வழித்தடங்களிலும், மண்ணடி மற்றும் வேப்பேரி வழியாக செல்லும் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
எந்தெந்த வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்பது குறித்து ஏற்கனவே மாநகர போக்குவரத்து கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா என்பதையும் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது சிஎம்டி அதிகாரிகள் மற்றும் மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் உடன் இருந்தனர்.








