Home தமிழகம் “பொங்கலுக்கு இதுவரை இல்லாத பரிசு – அரசின் புதிய அறிவிப்பு”

“பொங்கலுக்கு இதுவரை இல்லாத பரிசு – அரசின் புதிய அறிவிப்பு”

பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஒவ்வொரு அரிசி ரேஷன் அட்டைதாரர் குடும்பத்திற்கும் ரூ.3,000 ரொக்க பரிசு வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதன் மூலம், மாநிலம் முழுவதும் உள்ள 2 கோடியே 22 லட்சம் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 பொங்கல் ரொக்க பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000 ரொக்க பரிசு வழங்கப்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டில், பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவற்றுடன் ரூ.3,000 ரொக்கப் பணமும் வழங்கப்படும். இதற்காக வேஸ்டி மற்றும் சேலைகள் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டுகளில் பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.1,000 மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், அதற்கு முந்தைய ஆண்டுகளில் ரூ.2,500 வழங்கப்பட்டது. இந்த நிலையில், இவ்வாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.3,000 ரொக்க பரிசு வழங்கப்படுவது இதுவரை வழங்கப்பட்ட மிக உயர்ந்த தொகையாகும்.

இந்த பொங்கல் பரிசுத் தொகையை வழங்குவதற்கான டோக்கன்கள் அந்தந்த ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என்றும், பொங்கல் திருநாளுக்கு முன்பாகவே ரொக்க பரிசு மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் ரேஷன் கடைகள் வழியாக விநியோகிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் ரூ.3,000 ரொக்க பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மக்கள் பொங்கல் பரிசுத் தொகை குறித்து எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்க பரிசு வழங்கும் திட்டத்தின் மூலம் தமிழக அரசுக்கு ரூ.6,936 கோடி வரை செலவு ஏற்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல் சூழ்நிலையில், பொங்கல் பரிசுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அந்த கோரிக்கைகளை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.