Home தமிழகம் கடல் மறைந்த நிலமா இது? தூத்துக்குடி அருகே அறிவியல் ஆய்வு தொடக்கம்

கடல் மறைந்த நிலமா இது? தூத்துக்குடி அருகே அறிவியல் ஆய்வு தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே உள்ள பட்டணமருதூர் – பனையூர் பகுதியில் கடல் சார்ந்த புதைப் படிமங்கள் மற்றும் படிவு பாறைகள் இருப்பதாகக் கூறப்படும் தகவலின் அடிப்படையில், மத்திய ஆய்வுக் குழு முதற்கட்ட கள ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.

இந்தப் பகுதியில் கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் இருக்கலாம் எனக் கூறி, தொல்லியல் ஆர்வலர் ராஜேஷ், உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து, கொல்கத்தாவிலிருந்து மத்திய விளங்கியல் துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழு விமானம் மூலம் தூத்துக்குடி வந்து, மாவட்ட ஆட்சியரை சந்தித்த பின்னர், பட்டணமருதூர் – பனையூர் பகுதியில் கள ஆய்வுகளை மேற்கொண்டனர்.

ஆய்வின் போது, அப்பகுதியில் காணப்படும் கடல் சிப்பிகள், முத்துச் சிப்பிகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களை ஒத்த அமைப்புகள், மேலும் படிவு பாறைகள் ஆகியவை முதற்கட்டமாக ஆய்வு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதி பண்டைய காலத்தில் கடலாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன் உண்மை தன்மை ஆய்வு முடிவுகளின் பின்னர் மட்டுமே உறுதி செய்யப்படும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், 2023 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது ஏற்பட்ட அரிப்பின் காரணமாக சில பாறைகள் மற்றும் அமைப்புகள் வெளிப்பட்டதாகவும், இதன் அடிப்படையில் இப்பகுதி குறித்த ஆய்வு மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போதைய ஆய்வு முதற்கட்ட கள ஆய்வாகும் என்றும், மேலும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே காலக்கணிப்பு மற்றும் வரலாற்று தகவல்கள் உறுதியாக தெரிவிக்கப்படும் என்றும் ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வின் முடிவுகள் தொடர்பான முழுமையான அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், இப்பகுதியின் வரலாற்று மற்றும் புவியியல் முக்கியத்துவம் குறித்து தெளிவான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.